கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்து அமைப்புகள் அழைப்பு


கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்து அமைப்புகள் அழைப்பு
x
தினத்தந்தி 17 Nov 2018 1:51 AM GMT (Updated: 17 Nov 2018 1:51 AM GMT)

சபரிமலை கர்மா சமிதி என்ற அமைப்பு கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதித்து கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன.கடந்த மாதம் 17–ந் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற 10–50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அய்யப்ப பக்தர்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் போலீசுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே அப்போது கடும் மோதலும் ஏற்பட்டது.

இந்த நிலையில் 2 மாத கால மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு நடையை திறந்தார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று கோர்ட்டு தீர்ப்பளித்த பிறகு கோவில் நடை திறக்கப்படுவது இது 3–வது முறையாகும்.

அத்தாழ பூஜை முடிகிற அடுத்த மாதம் 27–ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். பிறகு நடை மூடப்படும். பின்னர் மகர விளக்கிற்காக டிசம்பர் 30–ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். ஜனவரி 14–ந் தேதி மகர விளக்கு கொண்டாட்டத்துக்கு பின்பு ஜனவரி 20–ந் தேதி கோவில் நடை மூடப்படும். 

இதற்கிடையே, நேற்று இரவு ஐக்கிய வேதி அமைப்பின் தலைவி சசிகலா (வயது 56) சபரிமலைக்கு சென்றார். ஆனால், இரவு நேரம் என்பதால் அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, சசிகலா அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், போலீசார் சசிகலாவை கைது செய்தனர். இந்த நிலையில், சசிகலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.  முழு அடைப்பு போராட்டம் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

Next Story