காங்கிரசில் நேரு குடும்பத்தை சேராத தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி


காங்கிரசில் நேரு குடும்பத்தை சேராத தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
x
தினத்தந்தி 17 Nov 2018 8:37 AM GMT (Updated: 17 Nov 2018 8:37 AM GMT)

காங்கிரசில் நேரு குடும்பத்தை சேராத தலைவர்கள் இருந்து இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்து வருவதாகவும், முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கிய ஜனநாயக கட்டமைப்புகளால் தான் ‘டீ’ வியாபாரி ஒருவர் நாட்டின் பிரதமராக முடிந்தது என்றும் காங்கிரஸ் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று காங்கிரசை கடுமையாக சாடினார். சத்தீஷ்காரில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தலுக்காக அம்பிகாபூரில் நடந்த பா.ஜனதா பிரசார கூட்டத்தில் பேசும்போது,

ஒரு மிகப்பெரிய மனிதர் அதாவது பண்டித நேருவால்தான் ஒரு ‘டீ’ வியாபாரி பிரதமராக முடிந்தது என அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) கூறியிருக்கின்றனர். அப்படி நீங்கள் ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தால், ஒரு சிறிய விஷயத்தை செய்யுங்கள்.

அதாவது நேரு-காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக வெறும் 5 ஆண்டுகளுக்காவது நியமியுங்கள். அது உங்களால் முடியுமா? அப்படி நடந்தால், நேருஜி உண்மையிலேயே ஒரு ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

4 தலைமுறைகளாக காந்தி குடும்பம் நாட்டை ஆண்ட பிறகும்கூட, மோடி, ஒரு 4½ ஆண்டுகள் பிரதமராக இருப்பதை அவர்களால் ஏற்க முடியவில்லை என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், அவரது கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் இன்று நீண்ட பட்டியல் மூலம் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் ‘1947-ம் ஆண்டில் இருந்து ஆச்சாரியா கிருபாலானி, பட்டாபி சித்தராமையா, புருஷோத்தம்தாஸ் தான்டன், யூ.என். தேபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவைய்யா, காமராஜர், நிஜலிங்கப்பா, சி.சுப்பிரமணியன், ஜகஜீவன் ராம், ஷங்கர் தயாள ஷர்மா, டி.கே.பரூவா, பிரமானந்த ரெட்டி, பி.வி.நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களாக பதவி வகித்துள்ளனர் என்பதை மோடிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்’ என குறிப்பிட்டிள்ளார்.

மேலும், சுதந்திரத்துக்கு முன்னர் பாபா சாகேப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர், மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இந்த பதவியை அலங்கரித்துள்ளனர்  என்பதையும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எளிய குடும்பத்தில் பிறந்த தலைவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ், டாக்டர் மன்மோகன் சிங் இன்னும் பலரை உதாரணம் காட்டலாம்.

மேலும்  காங்கிரஸ் தலைவர் யார் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டு பிரதமர் நீண்ட நேரம் பேசுகிறார். அந்த நேரத்தில் ஒரு பாதியை ஒதுக்கி பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, ரபேல், சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவற்றைப் பற்றி பிரதமர் பேசுவாரா?

மேலும், விவசாயிகள் தற்கொலை, வேலையில்லாமை, கும்பல் வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வனகொடுமை, காதலருக்கு எதிரான வன்முறை, பசு பாதுகாப்பு கும்பல்களின் வன்முறை, அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றியும் பிரதமர் பேசுவாரா? இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story