ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Nov 2018 2:00 PM GMT (Updated: 18 Nov 2018 2:00 PM GMT)

நாளை ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டையும், இந்திய பொருளாதாரத்தையும் மதிப்பிடும் நாளாக இருக்கும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

 ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையை சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு பணம் கேட்டுள்ளதாக பல்வேறு தவறான தகவல்கள் ஊடகங்களில் பரவி வருகின்றன. ஆனால் அரசிடம் போதுமான நிதி கையிருப்பு உள்ளது.

 எனவே ஊடகங்களில் வெளியானது போல ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியோ அல்லது ரூ.1 லட்சம் கோடியோ நிதி கேட்கும் பரிந்துரை எதுவும் அரசிடம் இல்லை’ என்றார். மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் மோதல் என்று தகவல் வெளியான நிலையில் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்நிலையில் நாளை 19-ம் தேதி வாரியக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கவர்னர் உர்ஜித் படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவிக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் நாளை ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டையும், இந்திய பொருளாதாரத்தையும் மதிப்பிடும் நாளாக இருக்கும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவும் நிலையில் நாளை வாரியக்குழு கூட்டத்தில் இருதரப்பும் சந்திக்கிறது. ரிசர்வ் வங்கியையும், அதன் உபரி நிதியையும் கைப்பற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மற்ற கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுவதெல்லாம் தெளிவில்லாமல் இருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் ரிசர்வ் வங்கியை, ஒரு வாரியம் நிர்வகித்தது கிடையாது.

தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு ஆலோசனை தருவதெல்லாம் மிகவும் அபத்தமான செயலாகும். நவம்பர் 19-ம் தேதியென்பது ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டையும், இந்திய பொருளாதாரத்தையும் மதிப்பிடும் நாளாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story