இதுயென்ன புது பஞ்சாயத்து? படேல் சிலையா? வீரசிவாஜி சிலையா? பா.ஜனதாவிற்கு எதிராக வரிந்துக்கட்டும் சிவசேனா!


இதுயென்ன புது பஞ்சாயத்து? படேல் சிலையா? வீரசிவாஜி சிலையா? பா.ஜனதாவிற்கு எதிராக வரிந்துக்கட்டும் சிவசேனா!
x
தினத்தந்தி 19 Nov 2018 9:32 AM GMT (Updated: 19 Nov 2018 9:32 AM GMT)

சர்தார் படேல் சிலையைவிட உயரமாக, வீரசிவாஜி சிலையை அமைக்க கூடாது என மோடியும், அமித்ஷாவும் மிரட்டுவதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.


மும்பை,

வல்லபாய் படேல் சிலை

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், ‘ஒற்றுமை சிலை’ என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.


 
அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டது.

சத்ரபதி சிவாஜி

மராட்டிய பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே திறமை பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், வல்லமை பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர். ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய பேரரசு விரிவடைய வித்திட்டவர். மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவுகிறது.

சத்ரபதி சிவாஜி நினைவு சின்னம் கரையில் இருந்து 1½ கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படுகிறது. மேலும், அங்கு ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதன் மீது குதிரையில் அமர்ந்தவாறு சத்ரபதி சிவாஜி கம்பீரமாக செல்வதை போல் சிலை நிறுவப்படுகிறது. ரூ.3 ஆயிரத்து 600 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த சிலை, 192 மீட்டர் உயரத்துடன் (629 அடி), உலகிலேயே மிக உயரமான சிலை என்ற அந்தஸ்தை பெறுகிறது. அதாவது, சர்தார் வல்லபாய் படேல் சிலையை காட்டிலும், அதிக உயரத்தில் சிலை அமைக்கும் வகையில் திட்டமிருந்தது. 

சிலை, பீடத்துடன் சேர்த்து 192 மீட்டர் உயரம் கொண்டதாக நிறுவ மராட்டிய அரசு முடிவு செய்திருந்தது. பின்னர் உயரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி தற்போது சத்ரபதி சிவாஜி சிலையை 210 அடி உயரம் கொண்டதாக நிறுவ முடிவு செய்யப்பட்டது. அரபிக்கடலில் 210 அடி உயரத்தில் அமைய உள்ள சத்ரபதி சிவாஜி சிலைக்கு, மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியது. 2016 டிசம்பரில் சத்ரபதி சிவாஜி சிலை பூமி பூஜை விழா கோலாகலமாக தொடங்கியது, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2021–ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

இப்போது பிரச்சனை என்ன?

இந்நிலையில் வீரசிவாஜியின் சிலை உயரத்தை செலவை காரணம் காட்டி குறைக்க மராட்டிய மாநில பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. இம்முடிவு சிவசேனாவை கோபமடைய செய்துள்ளது. எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரசும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. வல்லபாய் படேல் சிலை அதிக செலவில் கட்டமைக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. ஒருதரப்பு சிலை அமைக்கப்பட்டதை வரவேற்றாலும், மறுதரப்பு இவ்வளவு செலவில் தேவைதானா? இதனை படேல் உயிரோடு இருந்து இருந்தால் ஏற்றிருக்க மாட்டார் என்றெல்லாம் விவாதம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் உயரத்தில் படேல் சிலையா? வீரசிவாஜி சிலையா? என்று பா.ஜனதாவிற்கு எதிராக சிவசேனா எழுந்துள்ளது.
 
மராட்டியம் மற்றும் மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, வீர சிவாஜியின் சிலை பிற அரசியல் கட்சி தலைவர்களின் சிலையைவிடவும் மிகவும் உயரமாக இருக்க வேண்டும், இதற்கு அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஜூலையில் மராட்டிய சட்டசபையில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் வீரசிவாஜி சிலையின் உயரம் குறைப்பு தொடர்பாக கேள்வியை எழுப்பியது, ஆனால் உயரம் குறைப்பு கிடையாது என மராட்டிய பா.ஜனதா அரசு நிராகரித்தது.



இந்நிலையில்தான் வீரசிவாஜியின் சிலை உயரத்தை செலவை காரணம் காட்டி குறைக்க மராட்டிய பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதைவிட உயரத்தை குறைக்கவும், இதன் மூலம் 340 கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சிலை அமைக்கும் விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மொத்த உயரத்தில் எந்தஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவசேனா பாய்ச்சல்

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ள சிவசேனா, குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேல் சிலையைவிட உயரமாக, வீரசிவாஜி சிலையை அமைக்க கூடாது என மராட்டிய அரசை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. வீரசிவாஜி சிலையில் உயரத்தை குறைப்பது குறுகிய எண்ணத்தை காட்டுகிறது என சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறியுள்ளது. வீரசிவாஜி சிலை உலகிலேயே உயரமான சிலையாக இருக்க வேண்டும் என்று  ஒவ்வொரு மராத்தியர்களும் விரும்புகின்றனர். அதற்கு ஏற்றவகையில் அரபிக்கடலில் சிலையை அமைக்க மராட்டிய அரசு திட்டமிட்டது. ஆனால் சிலையின் உயரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்போது வீரசிவாஜியின் சிலை உயரத்தை குறைக்க வேண்டிய அவசியம் என்ன? உலகிலேயே உயரமான சிலை என்ற பெயரை தற்போது படேல் சிலை பெற்று விட்டது. அதைவிட உயரமான சிலை அமைக்கப்படக்கூடாது என்பது பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் அமித் ஷாவின் முடிவாகும். மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிசால் இந்த முடிவை மீற முடியவில்லை. இவ்விவகாரத்தில் தன்னுடைய துணிவை காட்ட வேண்டும்.  பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவிற்கு பயப்படாமல் மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு அளித்த விவகாரத்தில் காட்டிய துணிவை சிலை விவகாரத்திலும் காட்ட வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
 


Next Story