காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடரும்; கே.டி. ராமராவ்


காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடரும்; கே.டி. ராமராவ்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:10 AM GMT (Updated: 19 Nov 2018 11:10 AM GMT)

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத கூட்டணி அமைக்கும் முயற்சிகள் தொடரும் என கே.டி. ராமராவ் கூறியுள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் சந்திரபாபு நாயுடு.  தெலுங்கு தேச கட்சியின் தலைவரான இவர் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத் பவார், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரை சமீபத்தில் சந்தித்து பேசினார்.

இதேபோன்று தெலுங்கானாவில் முதல் மந்திரியாக ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் பதவி வகிக்கிறார்.  இவர் இந்த வருட தொடக்கத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இல்லாத கூட்டணியை அமைக்கும் முயற்சிக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்காள முதல் மந்திரியான மம்தா பானர்ஜி, தேவகவுடா மற்றும் பிறரை சந்தித்து பேசினார்.  இவரது மகன் கே.டி. ராமராவ்.

இவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஆந்திர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு அரசியலில் மோசம் ஆன நிலையில் உள்ளார்.  அவரது அரசின் தோல்விகளை மத்திய அரசு மீது சுமத்த முயற்சிக்கிறார்.

அவர் (நாயுடு) பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.  பிரதமரை வில்லனாக சித்தரிக்க அவர் முயன்று வருகிறார்.

ஆனால் சந்திரசேகர ராவ் கூறியது போன்று, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவுக்கு பிரதமர் மற்றும் பா.ஜ.க. ஒரு முக்கிய விசயமே இல்லை என கூறினார்.

முதல் மந்திரியாக தனது தோல்விகளை மறைக்க பா.ஜ.க.வுக்கு எதிராக  எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் நாயுடு ஈடுபடுகிறார் என்றும் ராமராவ் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் நாட்டில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்த இரு கட்சிகளும் இல்லாத கூட்டணி ஒன்றை உருவாக்கும் எங்களது முயற்சிகள் தொடரும்.  ஏனெனில் இது நாட்டின் மிக பெரிய விருப்பம் என அவர் கூறினார்.

ஒரு மத்திய கட்டமைப்பில், மாநிலங்கள் அதிகாரம் பெற வேண்டிய தேவை உள்ளது.  சந்தர்ப்பவாத கூட்டணிகளை கொண்டு கிச்சடி அரசை அமைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை.  நாங்கள் எங்களின் முயற்சிகளை தொடர விரும்புகிறோம் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இல்லாத அரசு அமைக்க).  அது எப்படி உருவாகிறது என பொறுத்திருந்து காண்போம் என கூறினார்.

Next Story