லஞ்சம் விவகாரம் “மத்திய அமைச்சருக்கு சில கோடி வழங்கப்பட்டது!” சிபிஐ அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


லஞ்சம் விவகாரம் “மத்திய அமைச்சருக்கு சில கோடி வழங்கப்பட்டது!” சிபிஐ அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 19 Nov 2018 11:12 AM GMT (Updated: 19 Nov 2018 11:12 AM GMT)

சிபிஐ லஞ்சம் விவகாரத்தில் “மத்திய அமைச்சருக்கு சில கோடி வழங்கப்பட்டது” என சிபிஐ அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகித்து வந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக இருந்து வந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே  அதிகாரப் போட்டி நிலவியது. இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கினர். இப்படி ஒருவர் மீது மற்றொருவர் சரமாரியாக புகார்களை எழுப்பியது பெருத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில், அவர்கள் இருவரையும் பொறுப்பில் இருந்து விடுவித்து, கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.  சி.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்து வந்த எம். நாகேஸ்வரராவ் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஒரே நாளில் இரவோடு இரவாக தன்னை விடுப்பில் அனுப்பி விட்டு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதைக் கண்டு அலோக் வர்மா அதிர்ச்சி அடைந்தார்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவித்ததை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது, விசாரணை நடைபெற்று வருகிறது.
 
சிபிஐ அதிகாரி இடமாற்றம்

இந்நிலையில் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மணிஷ் குமார் சின்கா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய இடமாற்றத்திற்கு எதிராக மணிஷ் குமார் சின்காவும் சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளார். நவம்பர் 20-ம் தேதி அலோக் வர்மாவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கும் போது என்னுடைய வழக்கையும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

மத்திய அமைச்சருக்கு சில கோடி

சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் இருந்த தொழில் அதிபருக்கு சாதகமாக செயல்பட மத்திய அமைச்சர் சில கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று மணிஷ் குமார் சின்கா கூறியுள்ளார். என்னிடம் இருக்கும் ஆவணங்களை வெளியிட்டால் கோர்ட்டு அதிர்ச்சியடையும் எனவும் தெரிவித்துள்ளார். விசாரணையை திசைத்திருப்பவும், ராகேஷ் அஸ்தானாவிற்கு உதவி செய்யவும் என்னை இடமாற்றம் செய்துள்ளனர் என்று மணிஷ் குமார் சின்கா கூறியுள்ளார். இதற்கிடையை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, “எங்களை எதுவும் அதிர்ச்சியடைய செய்யாது,” என கூறியுள்ளது.

Next Story