மத்திய அரசு உடனான சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு நிபுணர் குழுக்கள் - ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவு


மத்திய அரசு உடனான சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு நிபுணர் குழுக்கள் - ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 19 Nov 2018 9:15 PM GMT (Updated: 19 Nov 2018 7:13 PM GMT)

மத்திய அரசு - ரிசர்வ் வங்கி இடையேயான சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு நிபுணர் குழுக்களை அமைக்க ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மும்பை,

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு காணப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள ரூ.9.69 லட்சம் கோடியை குறைத்துக் கொள்ள வேண்டும் (அதாவது சுமார் ரூ.3.5 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு தரவேண்டும்) என்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் கடன்கள் வழங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதுபோன்ற 5 முக்கிய பிரச்சினைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் வெடித்தது. குறிப்பாக மத்திய அரசு நிதி கோரிய விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டம் அதன் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நேற்று மும்பையில் நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் 4 துணை கவர்னர்கள், இயக்குனர்கள், மத்திய அரசின் சார்பில் இயக்குனர்களாக நியமிக்கப்பட்ட பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதிச் சேவை செயலாளர் ராஜீவ் குமார் மற்றும் சுதந்திரமான இயக்குனர்கள் எஸ்.குருமூர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசு நியமித்த இயக்குனர்களும், குருமூர்த்தியும் இந்திய பொருளாதாரத்தை ஊக்கும் விதமாக உபரி நிதியை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும், வங்கி சாரா நிதிக் கம்பெனிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதையடுத்து மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே உள்ள சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண சிறப்பு நிபுணர் குழுக்களை அமைப்பது என்று கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல் முதலீடு மாற்றம் செய்வது தொடர்பாக சிறப்பு குழுக்களை அமைக்கவும் ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டது.

இதுபற்றி ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பொதுத்துறை வங்கிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டு உள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில், நடுத்தர தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை எளிதாக்குவதையும் ஏற்றுக் கொண்டு உள்ளது. ஆனால் வங்கி சாரா நிதிக் கம்பெனிகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்குவது பற்றி எந்த முடிவு எடுக்கப்படவில்லை” என்றார்.


Next Story