‘மீ டூ’ புகார் மீது வழக்குப்பதிவுக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


‘மீ டூ’ புகார் மீது வழக்குப்பதிவுக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Nov 2018 10:15 PM GMT (Updated: 19 Nov 2018 7:36 PM GMT)

‘மீ டூ’ புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்ததாவது:-

‘மீ டூ’ அடிப்படையில் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகார்களில் தொடர்புடையவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் விரைவு கோர்ட்டுகளை அமைத்து இதுபோன்ற புகார் கள் மீது விசாரணை நடத்தவேண்டும். தேசிய மகளிர் ஆணையம் பகிரங்கமாக வெளியில் வந்து புகார் அளிக் கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், “நீதிபதிகள் எந்த குற்றத்துக்கும் தண்டனை வழங்கும் வகையில் கிரிமினல் சட்டத்தில் இடம் உள்ளது. அந்த நடைமுறைகளை கடைப்பிடித்துவிட்டு பிறகுதான் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும்” என்று கூறினார்.

அதற்கு மனுதாரர் எம்.எல்.சர்மா, “பெரிய மனிதர்கள் தொடர்புடைய இதுபோன்ற குற்றங்கள் விசாரணைக்குக் கூட வருவது இல்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது தாமாக முன்வந்து தங்கள் புகார்களை பகிரங்கமாக கூறுகின்றனர். இந்த புகார்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரவேண்டும்” என்று கூறினார்.

இதற்கு தலைமை நீதிபதி, “இது தொடர்பாக சட்டத்தில் உள்ள உரிய நடைமுறைகளை கடைப்பிடித்து விட்டு பிறகே சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவேண்டும். பாதிக்கப்பட்ட தனிநபர்களே இது தொடர்பான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் கோர்ட்டை அணுகமுடியும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story