மத்திய அமைச்சர் மீது சிபிஐ அதிகாரி லஞ்சப் புகார்; ‘கிரைம் திரில்லர்’ படத்துடன் ஒப்பிட்டு ராகுல் விமர்சனம்


மத்திய அமைச்சர் மீது சிபிஐ அதிகாரி லஞ்சப் புகார்; ‘கிரைம் திரில்லர்’ படத்துடன் ஒப்பிட்டு ராகுல் விமர்சனம்
x
தினத்தந்தி 20 Nov 2018 2:35 PM GMT (Updated: 20 Nov 2018 2:35 PM GMT)

மத்திய அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீது சிபிஐ அதிகாரி லஞ்சப் புகார் சுமத்தியுள்ளதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


 புதுடெல்லி,

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி மணிஷ் குமார் சின்கா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இடமாற்றத்திற்கு எதிராக மணிஷ் குமார் சின்காவும் சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் இருந்த தொழில் அதிபருக்கு சாதகமாக செயல்பட மத்திய அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி சில கோடி லஞ்சம் பெற்றுள்ளார். என்னிடம் இருக்கும் ஆவணங்களை வெளியிட்டால் கோர்ட்டு அதிர்ச்சியடையும். விசாரணையை திசைத்திருப்பவும், ராகேஷ் அஸ்தானாவிற்கு உதவி செய்யவும் என்னை இடமாற்றம் செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. சவுத்ரி ஆகியோரின் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என்று மறுத்துள்ளார். இதுபற்றி அஜித் தோவலும், கே.வி. சவுத்ரியும் உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்விவகாரத்தை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 
 
சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே. சின்காவின் ஊழல் புகாரை, ‘கிரைம் திரில்லர்’ (குற்றப்புலனாய்வு) சினிமா படத்துக்கு ஒப்பிட்டுள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘சவுதிகார் இஸ் தீப் (காவலாளியே திருடர்) என்னும் கிரைம் திரில்லர் படம் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் புதிய அத்தியாயத்தில், சி.பி.ஐ. உயர் அதிகாரி மிக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒரு மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சட்டத்துறை செயலாளர், மத்திய மந்திரிசபை செயலாளர் ஆகியோர் மீது சுமத்தி உள்ளார்’’ என கூறி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி என கூறுவது வழக்கம். அதை ராகுல் காந்தி தொடர்ந்து கிண்டல் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story