சுப்ரீம் கோர்ட்டில், சீல் வைத்த உறையில் தாக்கலான விவரங்கள்; ஊடகத்தில் வெளியானதால் தலைமை நீதிபதி கடும் கோபம் - வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்திவைத்தார்


சுப்ரீம் கோர்ட்டில், சீல் வைத்த உறையில் தாக்கலான விவரங்கள்; ஊடகத்தில் வெளியானதால் தலைமை நீதிபதி கடும் கோபம் - வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்திவைத்தார்
x
தினத்தந்தி 20 Nov 2018 11:30 PM GMT (Updated: 20 Nov 2018 8:53 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில், சீல் வைத்த உறையில் தாக்கலான விவரங்கள் ஊடகத்தில் வெளியானதால் தலைமை நீதிபதி கடும் கோபமடைந்து, வழக்கை விசாரிக்க மறுத்து ஒத்திவைத்தார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா தரப்பு சீல் வைத்த உறையில் தாக்கல் செய்த விவரங்கள் இணைய இதழில் வெளியானதால், தலைமை நீதிபதி கடும் கோபம் அடைந்தார். வழக்கை விசாரிக்க மறுத்து, ஒத்திவைத்தார்.

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நீடித்து வந்த பனிப்போரில் களம் இறங்கிய மத்திய அரசு, கடந்த 23-ந்தேதி அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுப்பில் அனுப்பியது.

தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 12-ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில், அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கை 3 சீல் வைத்த உறைகளில் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த அறிக்கை மீது அலோக் வர்மா சீல் வைத்த உறையில் நவம்பர் 19-ந்தேதி பிற்பகல் 1 மணிக்குள் பதில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, நேற்றுமுன்தினம் அலோக் வர்மா தரப்பில் அவருடைய வக்கீல்கள் பதில் அறிக்கையை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்தனர்.

ஆனால் இந்த பதில் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் ஆஜரான அலோக் வர்மா தரப்பு வக்கீல் கோபால் சங்கர் நாராயணன் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மேலும் சிறிது அவகாசம் கோரினார். ஆனால், நீதிபதிகள் நேற்றுமுன்தினம் மாலை வரை மட்டுமே பதிலளிக்க அவகாசம் அளிப்பதாக தெரிவித்தனர்.

அதே சமயத்தில், அலோக் வர்மாவின் பதில் மனு, தி வயர் என்ற இணைய இதழில் 17-ந்தேதி விரிவாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் மிகவும் கோபமாக காட்சியளித்த தலைமை நீதிபதி, அலோக் வர்மா தரப்பு மூத்த வக்கீல் பாலி நாரிமனிடம் “கோர்ட்டுக்கு மட்டுமே சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்த பதில் அறிக்கையின் விவரங்கள் ஒரு குறிப்பிட்ட ஊடகத்துக்கு கசிந்தது எப்படி?” என கேள்வி எழுப்பினார்.

அதேபோல நேற்றுமுன்தினம் ஏற்கனவே பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு வக்கீல் அதற்காக கூடுதல் அவகாசம் கோரியது ஏன்? எனவும் கேட்டார்.

அதற்கு பாலி நாரிமன், தன்னை கேட்காமல் தங்கள் தரப்பு ஜூனியர் வக்கீல் தவறாக அவகாசம் கோரியுள்ளார் என்று தெரிவித்தார். ஆனால் அந்த பதிலில் தலைமை நீதிபதி திருப்தி அடையவில்லை. மேலும் தலைமை நீதிபதி, கோர்ட்டில் தாக்கல் செய்த சீல் வைத்த அறிக்கை வெளியே கசிந்த விவகாரத்தில் தனது கடும் ஆட்சேபனைகளை தெரிவித்தார்.

யாருடைய சொந்த கருத்துகளை கேட்கும் இடம் அல்ல இந்த கோர்ட்டு எனவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் நிகழ்வுகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதேபோல, இந்த நீதிமன்றத்திற்கு என்று ஒரு மாண்பு உள்ளது. அதற்கு பங்கம் வர ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் கடிந்து கொண்டார்.

அதேபோல “நடைமுறை ஒன்று இருந்தால் அது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும், எங்களிடம் ஒரு கோரிக்கை வைத்த பின்னர் அதை போய் ஊடகங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ட்டின் மிக மூத்த உறுப்பினரான நீங்கள் இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? இது சரியான நடைமுறையா?” எனவும் கேள்வி எழுப்பினார்

இதற்கு மூத்த வக்கீல் பாலி நாரிமன் இந்த விவகாரத்தில் அறிக்கை விவரம் கசிந்தது எப்படி என தெரியவில்லை, இதற்காக தான் மிகவும் வருத்தம் தெரிவிப்பதாகவும், மேலும் ஊடகங்கள் தங்கள் தொடர்புகள் மூலம் செய்திகளை முன்பே அறிந்து வெளியிடுவது பத்திரிகை சுதந்திரம் எனவும் தெரிவித்தார்.

ஆனால் தலைமை நீதிபதி இந்த விளக்கங்களை ஏற்கவில்லை, மாறாக, இந்த வழக்கில் உங்கள் தரப்பு ஜூனியர் வக்கீல் இப்படி ஏற்கனவே தாக்கல் செய்த பதில் அறிக்கைக்கு மேலும் அவகாசம் கேட்டு கோர்ட்டில் முறையிட்ட விதம் ஏற்றுகொள்ளும்படியாக இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் வருவோர், போவோர் எல்லாம் இங்கு பேசிவிட்டு செல்வதற்கு நீதிமன்றம் ஒன்றும் நடைபாதை இல்லை எனவும் தெரிவித்தார். இதற்கு மூத்த வக்கீல் பாலி நாரிமன் இது தனக்கு தெரியாமல் நடந்துள்ளது என்றும், தான் இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை இன்று (நேற்று) விசாரிக்க முடியாது எனக் கூறி, வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், ‘தி வயர்’ இணைய இதழ் சார்பில் அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

தி வயர் வெளியிட்டுள்ள விவரங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அலோக் வர்மா தாக்கல் செய்த பதிலாகும். அவை சீல் வைக்கப்பட்ட உறையில் இல்லை. அந்த விவரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டவை அல்ல. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் இறுதி அறிக்கை எங்கள் இதழில் வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story