காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் புதிய கூட்டணி அரசு, ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம்


காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் புதிய கூட்டணி அரசு, ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னருக்கு கடிதம்
x
தினத்தந்தி 21 Nov 2018 3:08 PM GMT (Updated: 21 Nov 2018 3:20 PM GMT)

காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சியின் கூட்டணி அரசு அமைகிறது.

ஸ்ரீநகர்,

 
2014 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் எந்தஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி 28, பா.ஜனதா 25, தேசிய மாநாடு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களை கைப்பற்றின. இதர கட்சிகள் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜனதாவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. மெகபூபா முப்தி முதல்–மந்திரி ஆனார். ஆனால் கடந்த ஜூன் மாதம் அவருக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜனதா விலக்கிக் கொண்டது. 

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் ஆட்சியமைக்க பா.ஜனதா நடவடிக்கை மேற்கொண்டது. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக பா.ஜனதா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை முறியடிக்கும் விதமாக கடந்த சில நாட்களாக மக்கள் ஜனநாயக கட்சியும், காங்கிரசும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இதில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான திட்டம் அண்மையில் வகுக்கப்பட்டது.

காஷ்மீரில் திடீர் திருப்பமாக மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைக்க உள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டாலும் கூட ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து பா.ஜனதாவை எதிரியாக கருதும் தேசிய மாநாடுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்–மந்திரியுமான உமர் அப்துல்லா, காங்கிரஸ், மெகபூபா முப்தி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளார். தேசிய மாநாடுக் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. மக்கள் ஜனநாயாக கட்சியின் தலைவர் அல்டாப் புகாரி பேசுகையில், “கூட்டணி ஆட்சிக்கு மூத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். விரைவில் நற்செய்தி வரும்,” என கூறினார். 

மாநிலத்தில் கவர்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இந்த 3 கட்சிகளின் தலைவர்களும் கவர்னர் சத்யபால் மாலிக்கை நாளை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரி மெகபூபா முப்தி கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே என்னுடைய தலைமையில்தான் கூட்டணி அரசு இயங்கும் என்று மெகபூபா முப்தி தெளிவுப்பட தெரிவித்துள்ளார். 


Next Story