விசுவ இந்து பரிஷத் கருத்துக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு


விசுவ இந்து பரிஷத் கருத்துக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Nov 2018 8:45 PM GMT (Updated: 25 Nov 2018 7:15 PM GMT)

விசுவ இந்து பரிஷத் கருத்துக்கு முஸ்லிம் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

லக்னோ,

அயோத்தி மாநாட்டில் ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதுபற்றி லக்னோ நகரில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் மவுலானா வாலி ரெமானி நிருபர்களிடம் கூறியதாவது:-

விசுவ இந்த பரிஷத்தின் மாநாடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயின் அயோத்தி பயணம் ஆகியவை முஸ்லிம்கள், சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக வெளிப்படையாக விடுக்கப்பட்ட சவால் ஆகும். இது மசூதியை விட்டுக் கொடுப்பது தொடர்பான விவகாரம் அல்ல. எத்தனை மசூதிகளை படிப்படியாக இழக்கவேண்டி இருக்கும் என்ற கொள்கையோடு சார்புடையது. இன்று சிலருடன் பேசி வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டால் அடுத்து இன்னொருவர் இந்த கோரிக்கையுடன் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய முஸ்லிம் ஒற்றுமை முன்னணியின் தலைவர் முகமது யூனுஸ் சித்திக் டெல்லியில் நேற்று விடுத்த அறிக்கையில், “அயோத்தி பிரச்சினையில், ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக பேசுகின்றன. பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்துகின்றன. சுப்ரீம் கோர்ட்டு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கவேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தால் அதை முஸ்லிம்களின் அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.



Next Story