பெங்களூருவில், அரசு மரியாதையுடன் நடக்கிறது; நடிகர் அம்பரீஷ் உடல் இன்று அடக்கம் - குமாரசாமி, ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி


பெங்களூருவில், அரசு மரியாதையுடன் நடக்கிறது; நடிகர் அம்பரீஷ் உடல் இன்று அடக்கம் - குமாரசாமி, ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 25 Nov 2018 10:30 PM GMT (Updated: 25 Nov 2018 8:05 PM GMT)

மறைந்த நடிகர் அம்பரீசின் உடல் அடக்கம் முழு அரசு மரியாதையுடன் இன்று நடக்கிறது. அவரது உடலுக்கு முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அம்பரீஷ் நேற்றுமுன்தினம் காலமானார்.

நள்ளிரவில் ஜே.பி.நகரில் உள்ள வீட்டுக்கு அம்பரீஷின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு மந்திரிகள், அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் அம்பரீஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அம்பரீஷின் உடல் நேற்று காலை கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்-மந்திரி குமாரசாமி நேரில் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவரை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, அவரது மனைவி சென்னம்மா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா உள்பட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அம்பரீஷின் உடலுக்கு நேரில் வந்து நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், அம்பரீஷின் மனைவி சுமலதா, மகன் அபிஷேக் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். நடிகர்கள் சரத்குமார், சிரஞ்சீவி, மோகன்பாபு, பிரகாஷ்ராஜ், அர்ஜூன், சரத்பாபு, புனித் ராஜ்குமார், உபேந்திரா, யஷ், ரவிச்சந்திரன், சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், சுதீப், நடிகைகள் ராதிகா, சுகாசினி மணிரத்னம், லட்சுமி, அம்பிகா, ஜெயந்தி, பாரதி விஷ்ணுவர்தன், மாலாஸ்ரீ, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட கன்னட திரையுலகினர் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மைதானத்தை சுற்றிலும் சுமார் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அம்பரீஷின் உடல் அருகே அவரது மனைவியான நடிகை சுமலதா, மகன் அபிஷேக் அம்பரீஷ் ஆகியோர் முகத்தில் சோகம் ததும்ப அமர்ந்து இருந்தனர். சுமலதா, கண்ணீர் வடித்தபடி இருந்தார். முதல்-மந்திரி குமாரசாமி அஞ்சலி செலுத்திய பிறகு அங்கேயே இருந்தார்.

பெங்களூருவில் கன்டீரவா ஸ்டூடியோவில் நடிகர் ராஜ்குமார் சமாதியின் அருகே அம்பரீஷின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று குமாரசாமி அறிவித்தார். இதற்காக அங்குள்ள 1½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து, அம்பரீஷின் உடல், ஹெலிகாப்டரில் மண்டியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அம்பரீஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடன் சென்றனர். முதல்-மந்திரி குமாரசாமியும் ஹெலிகாப்டரில் மண்டியாவுக்கு சென்றார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக அம்பரீஷின் உடல் வைக்கப்பட்டது.

இன்று(திங்கட்கிழமை) காலை மீண்டும் பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்திற்கு அதே ஹெலிகாப்டரில் அம்பரீஷின் உடல் எடுத்து வரப்படுகிறது. அங்கு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் அம்பரீஷின் உடல் ஊர்வலமாக கன்டீரவா ஸ்டூடியோவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னாள் மத்திய, மாநில மந்திரியான நடிகர் அம்பரீஷின் மறைவையொட்டி கர்நாடக அரசு 3 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அம்பரிஷ் அற்புதமான மனிதர். என்னுடைய நல்ல நண்பர். உங்களை இழந்து வருந்துகிறேன். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், “42 வருடங்களாக என் நண்பர் அம்பரீஷ். முரட்டு உருவம், மழலை உள்ளம். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் என்னை போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கமும் இரங்கல் தெரிவித்துள்ளது.



Next Story