பிரசல்ஸ் உச்சி மாநாட்டில் இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்


பிரசல்ஸ் உச்சி மாநாட்டில் இங்கிலாந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல்
x
தினத்தந்தி 25 Nov 2018 11:00 PM GMT (Updated: 25 Nov 2018 9:00 PM GMT)

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரிக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு, பிரசல்ஸ் உச்சி மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரசல்ஸ்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலக முடிவு எடுத்து, இது தொடர்பாக மக்களின் கருத்தை அறிய 2016-ல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மையான மக்கள், ஆதரவு தெரிவித்தனர். அதையடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக இங்கிலாந்து அரசு முடிவு எடுத்தது. இந்த முடிவில் உடன்பாடு இல்லாமல், அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்.

உடனே ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான ‘பிரிக்ஸிட்’ நடவடிக்கையை தெரசா மே தொடங்கினார்.

இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி, விலகுவது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்து 4 மந்திரிகள் ஒரே நாளில் பதவி விலகி, பிரதமர் தெரசா மேவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

இந்த ஒப்பந்தத்துக்கு தெரசா மே, தனது சொந்தக்கட்சியிலேயே (கன்சர்வேடிவ் கட்சி) எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.ஆனாலும் அவர், இந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு நன்மையாக முடியும், அதை எப்படியாவது நிறைவேற்றியே தீருவேன் என உறுதிபட தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.

இந்த நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பிரிக்ஸிட் ஒப்பந்தத்துக்கு, ஐரோப்பிய கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 27 நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். இதை ஐரோப்பிய கூட்டமைப்பு கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு ஒப்புதல் அளித்து விட்டாலும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உடனே நிம்மதி அடைந்து விட முடியாது.

அடுத்து இந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் அவர் பெற்றாக வேண்டும். இந்த ஒப்புதலை அவர் அடுத்த மாதம் பெற வேண்டும். எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, என்.என்.பி. கட்சி, டி.யு.பி. கட்சிகள் ஒப்பந்தத்துக்கு எதிராக ஓட்டு போடப்போவதாக அறிவித்துள்ளன.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் சிலரும் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பது தெரசா மேவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் அவர் நாட்டு மக்களுக்கு ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது என நீங்கள் ஓட்டு போட்ட நிலையில்தான் நான் பிரதமர் பதவிக்கு வந்தேன்.

2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தீர்கள். அந்த பொதுவாக்கெடுப்பு முடிவுக்கு கவுரவம் அளிப்பதாகத்தான் எனது ஒப்பந்தம் அமைந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் நமது நாட்டு நலனை கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது. இது நமது ஒட்டு மொத்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பலன் தரக்கூடியது.

இது உங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கானது. இது நமக்கு நிறைய வாய்ப்புகளை பெற்றுத்தரும். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி வெளியேறும். இந்த ஒப்பந்தத்தின் பின்னால் நீங்கள் (மக் கள்) இருந்து ஆதரவு தர வேண்டும்.

நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவதற்காக நான் முழுமனதோடும், ஆன்மாவோடும் பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story