“நாங்களும் பஞ்சாபிகள்தான்” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை


“நாங்களும் பஞ்சாபிகள்தான்” பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2018 9:21 AM GMT (Updated: 26 Nov 2018 9:21 AM GMT)

பாகிஸ்தான் தளபதிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் நேரடியாகவே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குருதாஸ்பூர்,

சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக், தனது வாழ்நாளில் 18 ஆண்டுகளை தற்போதைய பாகிஸ்தானின் நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்துள்ளார். கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்படி, குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. மறுபக்கம், பாகிஸ்தான் பகுதியில் கர்தார்பூரில் இருந்து சர்வதேச எல்லை வரை வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்தியப் பகுதியில் அமைக்கப்படும் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அமரீந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் பகுதியில் வரும் 28-ம் தேதி நடைபெறும் விழாவில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நாட்டவுள்ளார்.

அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், சமீபத்தில் பஞ்சாப்பில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நேரடியான எச்சரிக்கையை விடுத்தார்.  “ஒரு ராணுவ வீரராக பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய, பதன்கோட் மற்றும் அமிர்தசரசுக்கு பயங்கரவாதிகளை அனுப்பியது பாகிஸ்தான். இது கோழைத்தனமானது. உங்களை (பாகிஸ்தான் ராணுவ தளபதி பஜ்வா) எச்சரிக்கிறேன். நாங்களும் பஞ்சாபிகள்தான். இங்கு நுழையவும் முடியாது, இங்கு அமைதியை சீர்குலைக்கவும் முடியாது,” என்று எச்சரிக்கிறேன் என்றார். 

Next Story