மேகதாது அணை: கர்நாடகாவுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்


மேகதாது அணை: கர்நாடகாவுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிச்சாமி கடிதம்
x
தினத்தந்தி 27 Nov 2018 12:26 PM GMT (Updated: 27 Nov 2018 12:26 PM GMT)

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.


சென்னை,


முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது பகுதியில் குடிநீர் பயன்பாட்டுக்கு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடகாவின் காவிரி நீராவரி நிகாம் அமைப்புக்கு கடந்த நவம்பர் மாதம், மத்திய நீர் வள ஆணையம் அனுமதி அளித்தது.

இந்த அணை கட்டுவதற்காக விரிவான அறிக்கை தயாரிக்கும் கர்நாடக அரசின் செயல்பாடுகளை நிறுத்துமாறு, மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தக் கோரி கடந்த 4.9.2018 அன்று கடிதம் எழுதினேன். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற தொடர்புள்ள மாநிலங்களின் ஒப்புதலின்றி காவிரி ஆற்றில் எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறியிருந்தேன். 8.10.2018 அன்று தங்களிடம் அளிக்கப்பட்ட குறிப்பாணையிலும் அதனை வலியுறுத்தியிருந்தேன்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தயாரித்திருக்கும் செயலாக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஏற்கெனவே கூறியிருந்தேன். செயலாக்க அறிக்கையில் உள்ளதுபடி அந்த அணையானது குடிநீர் திட்டத்திற்கானது மட்டுமல்ல. கர்நாடகாவில் காவிரி பாசன பரப்பை அதிகரிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

தமிழக அரசின் நேர்மையான, நியாயமான இந்தக் கருத்துகளை ஆலோசிக்காமல், மத்திய நீர்வள ஆணையம் மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவுத் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. 

மத்திய நீர் வள ஆணையத்தின் நடவடிக்கை, காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வள ஆனையத்திற்கு உத்தரவிடுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 


Next Story