மிசோரம் சட்டமன்ற தேர்தலில் நடந்து வந்து வாக்களித்த 108 வயது முதியவர்


மிசோரம் சட்டமன்ற தேர்தலில் நடந்து வந்து வாக்களித்த 108 வயது முதியவர்
x
தினத்தந்தி 28 Nov 2018 12:35 PM GMT (Updated: 28 Nov 2018 12:35 PM GMT)

மிசோரமில் அமைதியுடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு பதிவு செய்த 108 வயது நிறைந்த முதியவரே அதிக வயதுடைய வாக்காளர் என தெரிய வந்துள்ளது.

அய்சாவல்,

40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் சட்டமன்ற தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது.  இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த வாக்கு பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.  இந்த தேர்தலில் வாக்கு பதிவு செய்த ரோச்சிங்கா (வயது 108) என்ற முதியவர் அதிக வயதுடைய வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் அய்சாவல் கிழக்கு 1 தொகுதியில், ஜீமாபாவக் வடக்கு பகுதியில் வசித்து வருகிறார்.  தனது பக்கத்து வீட்டுக்கார நபர்களுடன் சேர்ந்து நடந்தபடி வந்து வாக்களித்து சென்றார்.

அவர் வாக்கு பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தேர்தல்களில் வாக்களிப்பதில் இருந்து நான் தவறமாட்டேன்.  இது நமது கடமை.  நமது கடமையில் நாம் தவறினால், பின்னர் அரசாங்கம் தனது கடமையில் இருந்து தவறும்பொழுது எப்படி நாம் கேள்வி எழுப்ப முடியும்? என்று கூறினார்.

இதேபோன்று 106, 104 மற்றும் 96 வயதுடைய வாக்காளர்களும் வாக்கு பதிவு செய்து சென்றுள்ளனர்.

மிசோரம் மற்றும் திரிபுரா எல்லையில் ஹச்சேக் தொகுதியில் கவர்தா வாக்கு சாவடி 3ல் தர்ரோனனி (வயது 106) என்ற மூதாட்டி வாக்கு பதிவு செய்து சென்றார்.  இவர் 2வது அதிக வயதுடைய வாக்காளர் ஆவார்.

Next Story