இந்தியாவுடன் வலுவான, நாகரிகமான உறவை வைத்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது - இம்ரான்கான் பேச்சு


இந்தியாவுடன் வலுவான, நாகரிகமான உறவை வைத்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது - இம்ரான்கான் பேச்சு
x
தினத்தந்தி 28 Nov 2018 3:44 PM GMT (Updated: 28 Nov 2018 3:44 PM GMT)

இந்தியாவுடன் வலுவான, நாகரிகமான உறவை வைத்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.


கர்தார்பூர்,  


பாகிஸ்தானின் கர்தார்பூரில் ராவி நதிக்கரையோரம் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, கர்தார்பூரையும் இந்தியாவின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக்கையும் இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பதற்கு அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, குருதாஸ்பூர் மாவட்டத்தில் இருந்து சர்வதேச எல்லை வரை இந்தியா சார்பில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. பாகிஸ்தான் பகுதியில் அமைக்கப்படும் வழித்தடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வா, இந்தியாவின் மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது இம்ரான்கான் பேசுகையில், பிரான்சும் ஜெர்மனியும் நட்பு நாடுகளாக இருக்கும் போது இந்தியா-பாகிஸ்தான் ஏன் இருக்க முடியாது? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். இம்ரான்கான் பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளின் உறவை முன்னெடுத்து செல்லவே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடன் வலுவான, நாகரிகமான உறவை வைத்துக்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது.

நமது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய பிரச்சினையாக இருப்பது காஷ்மீர் விவகாரம் மட்டும்தான். மனிதன் நிலவிற்கே சென்று வந்து விட்டான். எனவே மனித குலத்தால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காண இயலும். ஜெர்மனியும், பிரான்சும் பல போர்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஆனாலும் அந்த நாடுகள் தற்போது நெருங்கி நல்ல உறவைக் கொண்டுள்ளன. அதேபோல் காஷ்மீர் பிரச்சினையை நம்மால் தீர்க்க முடியாதா? எல்லை பிரச்சினை விவகாரத்தில் இருபக்கமும் வலிமையான தலைமை தேவை. அப்போதுதான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார். இருப்பினும் பயங்கரவாதம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியதால்தான் இருதரப்பு பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story