கஜா புயல் பாதிப்பு: தமிழக மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் தகவல்


கஜா புயல் பாதிப்பு: தமிழக மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி - கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:51 PM GMT (Updated: 28 Nov 2018 4:51 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கின்றன. பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குவிந்து வருகிறது. ஆதரவுக்கரம் நீட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் உதவிகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவில், “கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தெரிவிக்கிறோம். புதன் கிழமை நடந்த அமைச்சரவையில் அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். உணவு, துணி, ஆடைகள் உட்பட அத்தியாவசியமான பொருட்களை 14 லாரிகளில் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளோம்.

ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவை என்றால் மேலும் உதவியை அனுப்புவோம் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.


Next Story