இம்ரான்கானுக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘முதலில் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துங்கள்’’


இம்ரான்கானுக்கு இந்தியா கடும் கண்டனம் ‘‘முதலில் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துங்கள்’’
x
தினத்தந்தி 28 Nov 2018 11:58 PM GMT (Updated: 28 Nov 2018 11:58 PM GMT)

காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்த கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் கர்தார்பூரில் சாலை அமைக்கும் திட்டத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டி பேசிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், ‘இந்தியா–பாகிஸ்தான் இடையே உள்ள முக்கிய பிரச்சினை காஷ்மீர்தான், இதை தீர்த்துக்கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டார்.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ராவீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

சீக்கியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான ஒரு பக்திபூர்வ நிகழ்ச்சியை பாகிஸ்தான் பிரதமர் தனது அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டிருப்பது மிகவும் வருத்தத்துக்கு உரியது.

அதிலும் இந்தியாவின் ஓர் அங்கமான மற்றும் பிரிக்க முடியாத நிலமான காஷ்மீர் குறித்து தேவையின்றி அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை தடுத்தும் நிறுத்தும் விதத்தில் அவர்கள் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலில் பாகிஸ்தான் எடுக்கவேண்டும். மேலும் தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதற்கு ஆதரவு அளிக்கும் அத்தனை செயலையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.

இதுபோன்ற சர்வதேச கடமைகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உண்டு என்பதை நினைவு படுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story