கேரளாவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது; அசாம் போலீஸ் கொடுத்த தகவலால் நடவடிக்கை


கேரளாவில் பயங்கரவாதிகள் 3 பேர் கைது; அசாம் போலீஸ் கொடுத்த தகவலால் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2018 1:05 PM GMT (Updated: 29 Nov 2018 1:05 PM GMT)

அசாம் போலீஸ் கொடுத்த தகவலின்படி கேரள போலீஸ் மூன்று பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம், 

வடகிழக்கு மாநிலங்களில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகளை கேரளா போலீஸ் கைது செய்துள்ளது. மூன்று பயங்கரவாதிகளும் கேரளாவின் கொச்சியில் உள்ள ஆலுவாவில் பதுங்கி இருப்பது அசாம் போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் கேரளா மாநில போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீஸ் மூவரை கைது செய்துள்ளது. அவர்கள், அசாமில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். சமீபத்தில் அவர்கள் 3 பேரும் அசாமில் இருந்து கேரளாவுக்கு தப்பி ஓடியதாக தெரிகிறது.
 
போலீசார் நடத்திய விசாரணையில் போடோ பயங்கரவாதிகள் 3 பேரும் அங்கு தங்கி இருந்து ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளாவுக்கு ஏன் வந்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்கு பிறகு அவர்கள் அசாம் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அசாம் போலீசும் கேரளா விரைந்துள்ளது.

Next Story