இந்தியா -பாகிஸ்தான் உறவில் புதிய துவக்கம்: கர்தார்பூர் வழித்தடம் குறித்து மெகபூபா முப்தி கருத்து


இந்தியா -பாகிஸ்தான் உறவில் புதிய துவக்கம்:  கர்தார்பூர் வழித்தடம் குறித்து மெகபூபா முப்தி கருத்து
x
தினத்தந்தி 30 Nov 2018 2:42 AM GMT (Updated: 30 Nov 2018 2:42 AM GMT)

இந்தியா -பாகிஸ்தான் உறவில் புதிய துவக்கமாக இருக்க கூடும் என்று கர்தார்பூர் வழித்தடம் குறித்து மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர், 

பாகிஸ்தானின் கர்தார்பூரில், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் அடக்கஸ்தலத்தில் தர்பார் சாகிப் குருத்வாரா கட்டப்பட்டு உள்ளது. இந்த நகரை இந்தியாவின் பஞ்சாப் மாநில எல்லையில் உள்ள தேரா பாபா நானக் நகருடன் இணைக்கும் விதமாக 4.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்தியாவில் வசிக்கும் சீக்கியர்கள் புனித யாத்திரை மேற்கொள்ள வசதியாக இந்த சாலை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் தொடக்கமாக, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் சாலை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியுள்ளனர். இந்நிலையில், இந்த வழித்தட திட்டம் குறித்து மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது: - “இரு நாடுகளுக்கிடையேயான உறவை புதுப்பிக்கும் வகையில் கர்தார்பூர் வழித்தடம் இருக்கும். இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைகளை நாம் மாற்றியமைக்க முடியாது. ஆனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலமாக, அந்த எல்லையை அர்த்தமற்றதாக மாற்றலாம். இது இருநாடுகளின் வளர்ச்சிக்கு வழிவகுப்பதோடு, எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இந்து பக்தர்களுக்காக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சாரதா பீடம் உள்பட மற்ற இந்து கோயில்களுக்கும் வழித்தடம் அமைப்பதற்கான திட்டத்தை பரிசீலிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இதை வரவேற்றுள்ள மெகபூபா முப்தி, ”சாரதா பீடம், கடாஸ்ராஜ் உள்பட மற்ற இந்து கோயில்களுக்கும் வழித்தடம் அமைக்க பாகிஸ்தான் பிரதமர் முன்வருவது மிகச்சிறந்த முயற்சி. பிரதமர் மோடி இந்த திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இந்த முயற்சி இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தும் பாலமாக இருக்கும்” என்றார்.


Next Story