மேகதாது விவகாரம் : மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்


மேகதாது விவகாரம் : மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
x
தினத்தந்தி 30 Nov 2018 6:55 AM GMT (Updated: 30 Nov 2018 6:55 AM GMT)

மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.


புதுடெல்லி,

கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் காவிரி ஆறு ஓடும் வழியில் மேகதாது என்னும் பகுதி உள்ளது. இங்கு, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த ஜூலை மாதம் கர்நாடக அரசு சார்பில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு (பிசிபிலிட்டி ரிப்போர்ட்) அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த திட்டத்தில் அணை அமைய உள்ள இடம், பரப்பளவு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம் பெற்று இருந்தன. குடிநீர் மற்றும் மின் உற்பத்தி தேவைக்காக இந்த அணை கட்டப்பட இருப்பதாக இந்த திட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி ஆகியோரை குமாரசாமி நேரில் சந்தித்து பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் மேகதாதுவில் அணை திட்ட சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் திடீர் ஒப்புதல் அளித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த ஒப்புதலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தது. 

Next Story