ஒடிசா பா.ஜ.க.வில் பெரும் பின்னடைவு; 2 மூத்த தலைவர்கள் கட்சியைவிட்டு விலகினர்


ஒடிசா பா.ஜ.க.வில் பெரும் பின்னடைவு; 2 மூத்த தலைவர்கள் கட்சியைவிட்டு விலகினர்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:12 PM GMT (Updated: 30 Nov 2018 3:12 PM GMT)

ஒடிசா பா.ஜ.க.வில் இருந்து 2 மூத்த தலைவர்கள் விலகியதால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


 
புவனேஸ்வர், 

ஒடிசா மாநில பா.ஜ.க. எம்.எல். திலீப் ராய் மற்றும் கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் மகாபத்ரா கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். திலீப் ராய் தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். 2 மூத்த தலைவர்கள் விலகியதால் ஒடிசா பா.ஜ.க.வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மகாபத்ரா, திலீப் ராய் ஆகியோர் பிஜூ பட்நாயக் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர்கள். 

இருவரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை குறிவைத்து குற்றச்சாட்டை முன்வைத்து விலகியுள்ளனர் என தெரிகிறது.

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான் 2019 ஒடிசா தேர்தலில் முதல்வர் வேட்பாளராக பா.ஜனதா சார்பில் களமிறக்கப்படலாம் என பார்க்கப்படுகிறது.

பிஜூ பட்நாயக் மறைவுக்கு பிறகு பிஜூ ஜனதா தளம் கட்சியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தனர். எனினும் நவீன் பட்நாயக் பொறுப்புக்கு வந்த பிறகு இருவரும் ஓரங்கட்டப்பட்டனர். இதனால் மகாபத்ரா தனிக்கட்சி ஆரம்பித்தார். பின்னர் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தார். அதை தொடர்ந்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். இதேபோல் திலீப் ராயும் பிஜூ ஜனதாதளத்தில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். திலீப் ராய் மத்திய மந்திரி சபையில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story