டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி: விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு - மத்திய அரசு மீது கடும் தாக்கு


டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி: விவசாயிகள் போராட்டத்தில் ராகுல் காந்தி ஆவேச பேச்சு - மத்திய அரசு மீது கடும் தாக்கு
x
தினத்தந்தி 30 Nov 2018 11:45 PM GMT (Updated: 30 Nov 2018 9:47 PM GMT)

டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

அரசாங்கம் விவசாய கடன்களை ரத்துசெய்ய வேண்டும்; வேளாண் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது அவர்களுடைய முக்கியமான கோரிக்கைகள் ஆகும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் வியாழக்கிழமை தொடங்கி 2 நாட்கள் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இந்த போராட்டம் தொடங்கியது.

இதில் கலந்துகொள்வதற்காக உத்தரபிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், மத்தியபிரதேசம், மராட்டியம், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று முன்தினம் டெல்லி வந்தனர். பஸ், ரெயில் மற்றும் பிற வாகனங்களில் வந்தவர்கள் அங்குள்ள ராம்லீலா மைதானத்தில் திரண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி சென்றனர். அவர்களும் ராம்லீலா மைதானத்துக்கு சென்றனர். விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு அந்த மைதானத்திலேயே தங்கினார்கள்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்வோம் என்று விவசாய சங்க தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி விவசாயிகள், ராம்லீலா மைதானத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியை தடுக்க டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். ராம்லீலா மைதானத்தின் நுழைவாயில் பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆவேசமாக வெளியேறி போலீஸ் தடுப்பு வேலிகளை தகர்த்து எறிந்து, நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி ரஞ்சித்சிங் மேம்பாலம், பாரகம்பா ரோடு வழியாக நாடாளுமன்றம் நோக்கி சென்றது. வழியில் சில ரவுண்டானாக்களில் விவசாயிகளை போலீசார் கட்டுப்படுத்த முயன்றதால் விவசாயிகள் சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து கிளம்பினார்கள்.

பேரணியில் சென்ற விவசாயிகள் கைகளில் பதாகைகளை வைத்து இருந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினார்கள்.

இதில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் மண்டை ஓடு மற்றும் எலும்புகளுடன் சென்றனர்.

விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக டாக்டர்கள், வக்கீல்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் 700 பேரும் அவர்களுடன் பேரணியில் கலந்து கொண்டு நடந்து சென்றனர்.

பேரணி சென்ற பாதை முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

பேரணி நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலையம் அருகே சென்றதும், விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடங்குவதற்கு முன்பு தமிழக விவசாயிகள் 10 பேர் திடீரென முழு நிர்வாணமாக மாறி சாலையில் படுத்துக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, லோக் தந்திரிக் ஜனதா தள தலைவர் சரத் யாதவ், சமாஜ்வாடி மூத்த தலைவர் தர்மேந்திர யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி தினேஷ் திரிவேதி மற்றும் சமூகசேவகி மேதா பட்கர் உள்ளிட்டோர் பேசினார்கள்.

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தேசிய செயலாளர் ஆசிஷ் மிட்டல், யோகேந்திர யாதவ், வி.எம்.சிங், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகளும் பேசினார்கள்.

முன்னதாக தலைவர்கள் மேடையில் கைகோர்த்தபடி நின்றனர்.

விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில் மத்திய அரசை கடுமையாக தாக்கினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

விவசாயிகளின் நலனுக்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியாக திரண்டு இருக்கின்றன. அவர்களுடைய சிறந்த எதிர்காலத்துக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம். விவசாயிகள், இளைஞர்களின் குரலை யாராலும் ஒடுக்க முடியாது. மத்திய அரசு அவர்களை அவமதித்தால், அரசாங்கத்தை அவர்கள் தூக்கி எறிவார்கள்.

விவசாய கடனை ரத்துசெய்ய வேண்டும் என்றுதான் அவர்கள் கோருகிறார்கள். அவர்கள் அரசாங்கத்திடம் இலவச பரிசு கேட்கவில்லை. 15 பெரிய தொழில் அதிபர்களின் ரூ.3½ லட்சம் கோடி கடனை ரத்துசெய்யும் அரசாங்கத்தால், விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய முடியாதா? விவசாயிகளின் நலனை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசுகையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்றும், அவர்களுடைய முதுகில் குத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

சமாஜ்வாடி மூத்த தலைவர் தர்மேந்திர யாதவ் பேசுகையில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க தங்கள் கட்சி பாடுபடும் என்றார்.

சமூகசேவகி மேதா பட்கர் பேசுகையில், மத்திய அரசின் கொள்கைகள் பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும், விவசாயிகளின் நலனுக்காக எந்த பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தலைவர்கள் பேசி முடித்ததும், மாலையில் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பொதுவாகவே டெல்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். விவசாயிகள் போராட்டம் காரணமாக நேற்று போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.


Next Story