மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது- சர்வே


மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது- சர்வே
x
தினத்தந்தி 3 Dec 2018 7:09 AM GMT (Updated: 3 Dec 2018 7:09 AM GMT)

மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை மிரள வைத்த  ‘மீ டூ’ இயக்கம் இந்திப் பட உலகை உலுக்கி விட்டு   தமிழகத்திலும் ஊடுருவியது. பாலியல் ஆசாமிகளை அலற வைக்கும் இந்த ‘மீ டூ’ 2006-ம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டது.

தரானா புர்க் என்ற மனித உரிமை ஆர்வலர் இதை தொடங்கினார். அப்போது பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் இதன்மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டன. 2017-ல் ஹாலிவுட்டுக்குள் இது நுழைந்த பிறகுதான் உலக அளவில் பிரபலத்துக்கு வந்தது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டெய்ன் மீது 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் பாலியல் புகார் கிளப்பினார்கள். பல வருடங்களாக நடந்த அவரது பாலியல் அட்டூழியங்களை துணிச்சலாக பேச ஆரம்பித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக ஹாலிவுட் நடிகை அலிசா மிலானே தனக்கு தெரிந்த பெண்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளை கடந்த வருடம் அக்டோபர் 15-ந்தேதி ‘மீ டூ’வில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

மீ டு நானும் கூட இயக்கத்தின் மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டனர். 

இதன் எதிரொலியாக இந்தியாவில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இழந்தார். நடிகர் அர்ஜூன், கவிஞர் வைரமுத்து  உளபட  பல பிரபலங்கள் கடும் அவமானத்தைச் சந்தித்தனர்.

இந்நிலையில் மீடூ இயக்கம் குறித்து தனியார் ஆய்வு நிறுவனம், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதில் அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் 10 ஆண்களில் 8 பேர் பெண்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகுவதாகத் தெரிவித்தனர்.

பணிவாய்ப்பு, குடும்ப கவுரவம், சமுதாய அந்தஸ்தை இழக்க நேரிடும் என்பதால் நடத்தையில் கண்ணியம் காப்பதாக பெரும்பாலான ஆண் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதன்படி மீ டூ இயக்கத்தால் சுமார் 80 சதவீத ஆண்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீ டூ தொடர்பான வழக்குகளை பதிவு செய்த போது பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை  70 சதவிகிதத்தினர்  ஒப்புக்கொண்டனர்.

மீ டூ தொடர்பாக பெரும்பாலான வழக்குகள் ஊடகம் மற்றும் பாலிவுட் தொழில்துறையில் இருந்து வந்தாலும், மற்ற தொழில்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்படவில்லை என  77 சதவிகிதம் பேர் பதிலளித்து உள்ளனர்.

Next Story