முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் திடீர் கைது


முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் திடீர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2018 3:45 AM IST (Updated: 5 Dec 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், வேட்பாளருமான ரேவந்த் ரெட்டி திடீரென கைது செய்யப்பட்டார். சந்திரசேகர் ராவ் பொதுக்கூட்டத்தை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி. இவர் கோடங்கல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள கோஸ்கி என்ற இடத்தில் நேற்று மதியம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பொதுக்கூட்டத்தில் பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை கண்டித்து இந்த தொகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்தார். இதுதொடர்பாக அத்தொகுதியின் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் நரேந்தர் ரெட்டி போலீஸ் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். சந்திரசேகர் ராவ் பொதுக் கூட்டத்தை தடுக்கவே இந்த போராட்டத்தை ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் போலீசாரிடம், முதல்-மந்திரி பொதுக்கூட்டம் எந்த இடையூறும் இன்றி நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டனர். போலீசார் நேற்று அதிகாலை கோடங்கல் நகரில் உள்ள ரேவந்த் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அவரை கைது செய்தனர்.

அவரது 2 சகோதரர்களும், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவரும், வீட்டின் காவலாளியும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு போலீஸ்காரரும், காவலாளியும் 30 கிலோ மீட்டர் தூரத்தில் விடுவிக்கப்பட்டனர். ரேவந்த் ரெட்டியின் தீவிர ஆதரவாளர்கள் சிலரும் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டியின் மனைவி கீதா கூறும்போது, “அதிகாலை 3 மணிக்கு சுமார் 40 போலீசார் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். 5 நிமிடத்தில் அவர்கள் எனது கணவரை கைது செய்து தீவிரவாதியை போல் அழைத்துச் சென்றனர். இது மிகப்பெரிய ஜனநாயக விரோதம்” என்றார்.

ரேவந்த் ரெட்டி கைது செய்யப்பட்டதால் அந்த தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இந்த செயலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மாலையில் ரேவந்த் ரெட்டி விடுவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story