“எல்லையில் நேரிடும் உயிரிழப்பைவிட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படுவது அதிகம்” சுப்ரீம் கோர்ட்டு கவலை


“எல்லையில் நேரிடும் உயிரிழப்பைவிட குண்டும், குழியுமான சாலைகளால் ஏற்படுவது அதிகம்” சுப்ரீம் கோர்ட்டு கவலை
x
தினத்தந்தி 6 Dec 2018 9:38 AM GMT (Updated: 6 Dec 2018 9:38 AM GMT)

குண்டும், குழியுமான சாலைகளால் நேரிட்ட விபத்தில் கடந்த 5 வருடங்களில் 14,926 பேர் உயிரிழந்துள்ளனர் என கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு, இதனை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

புதுடெல்லி, 

எல்லையில் நேரிடும் துப்பாக்கி சண்டை, பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்படும் சண்டையில் நேரிடும் உயிரிழப்பை விடவும் இந்தியா முழுவதும் குண்டும், குழியுமான சாலைகளால் நேரிடும் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதி மதன் பி லோகர் தலைமையிலான பெஞ்ச் வருத்தம் தெரிவித்துள்ளது. 

நீதிபதிகள் தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா அடங்கிய பெஞ்ச், 2013 முதல் 2017 வரையில் மோசமான சாலைகள் காரணமாக நேரிட்ட விபத்துக்கள் சாலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதை காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் குண்டும், குழியுமான சாலைகளில் நேரிடும் விபத்து தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு கமிட்டி தாக்கல் செய்துள்ள பதில் தொடர்பாக மத்திய அரசு பதில் அறிக்கையை தாக்கல் செய்ய கோர்ட்டு கேட்டுக் கொண்டுள்ளது. ஜூலை 20-ம் தேதி விசாரணை நடைபெற்ற போதும் இதுபோன்ற விபத்துக்களில் நேரிடும் உயிரிழப்பு தொடர்பாக கவலையை தெரிவித்திருந்த சுப்ரீம் கோர்ட்டு, இது பயங்கரவாத தாக்குதலில் நேரிடும் உயிரிழப்பை விடவும் அதிகம் என தெரிவித்து இருந்தது. நிலையை உணர்ந்த சுப்ரீம் கோர்ட்டு, இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்படி சாலை பாதுகாப்பு கமிட்டியிடம் கேட்டுக் கொண்டது. 

மோசமான சாலையினால் உயிரினை இழந்தவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அதிகாரிகள் அவர்களுடைய பணிகளை செய்யாத காரணத்தினால் இதுபோன்ற உயிரிழப்புக்கள் நேரிடுகிறது என்பது பொதுவான விஷயமாகும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. 

Next Story