மேகதாதுவில் நாளை ஆய்வு; அணை நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படாது - கர்நாடக அமைச்சர் சிவக்குமார் பேட்டி


மேகதாதுவில் நாளை ஆய்வு; அணை நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படாது -  கர்நாடக அமைச்சர் சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:05 AM GMT (Updated: 6 Dec 2018 10:05 AM GMT)

மேகதாதுவில் கட்டப்படும் அணையில் சேமிக்கப்படும் நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படாது என அம்மாநில அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. 

இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அதற்கான பணிகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு தொடர்ந்து மறுத்து வரும் கர்நாடக அரசு, திறக்கும் தண்ணீரையும் தடுப்பதற்காக புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். இந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. 

கர்நாடக அமைச்சர் கடிதம்

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதித்து தனி தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கோரிக்கையான மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். 

மேகதாது அணை விவகாரத்தில் ஒரு சுமுகமான தீர்வுக்கு வர விரும்புகிறோம். இது குடிநீர் தேவைக்கான அணை. பருவமழை காலத்தில் கர்நாடகாவிலிருந்து மேட்டூருக்கு திறந்து விடப்படும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதைத் தேக்கி வைப்பதற்கான இந்தத் திட்டம் தமிழகத்துக்கு எதிரானது கிடையாது. ஆனால் இது தமிழக நலனுக்கு எதிரானது போன்ற தோற்றத்தை தமிழக மக்களிடையே பரவியுள்ளது. இதைப் பேச்சுவார்த்தை மூலம் தெளிவுபடுத்த நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

 சி.வி.சண்முகம் நிராகரிப்பு

இதற்கிடையே தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், மேகதாது விவகாரத்தில் பிரச்னையை பேசித் தீர்க்கலாம் என்ற கர்நாடக அமைச்சர் சிவகுமாரின் கோரிக்கையை நிராகரித்தார். 



கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார். 

கர்நாடகம் விடாப்பிடி

மேகதாது அணை நடவடிக்கைக்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஸ்திரம் காட்டுகிறது கர்நாடகம். காவிரியில் தமிழகத்திற்கு தேவையான நீருக்கே போராட வேண்டியது தான் உள்ளது. மேகதாது அணை கட்டுவது தமிழகத்திற்கு பாதகமானது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் பேசுகையில்,  கர்நாடக மாநிலம் மேகதாதுவில் கட்டப்படும் அணையில் சேமிக்கப்படும் நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படாது. அணைநீர் மின்சாரம் தயாரிக்கவே பயன்படுத்தப்படும், கர்நாடகத்திற்கு கொண்டு செல்லப்படாது. மேகதாது பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். 

மேகதாதுவில் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story