தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை + "||" + Sterlite plant affair Expert Group Discrimination is acting as National Green Tribunal Tamil Nadu Government response report

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த நிபுணர் குழு பாரபட்சமாக செயல்பட்டு இருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
புதுடெல்லி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையையும் சுற்றுப்புற பகுதிகளையும் ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.


இதைத்தொடர்ந்து நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தி கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்றும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிபுணர் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் அனுமதிக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த அறிக்கையை கடந்த 28-ந்தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது வாசித்துக் காட்டிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நிபுணர் குழு அறிக்கையின் நகல்களை இரு தரப்புக்கும் வழங்குமாறும் இந்த அறிக்கை தொடர்பாக இரு தரப்பினரும் ஒரு வாரத்தில் தங்கள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 7-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று தமிழக அரசு தரப்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் வக்கீல் ராகேஷ் சர்மா தாக்கல் செய்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதன் காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்ய மட்டுமே இந்த குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் இந்த குழு இவற்றையெல்லாம் விட்டு விட்டு ஆலையை மூடியது தவறா? என்று ஆய்வு செய்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு உள்ளது.

இந்த குழு பாரபட்சமாக செயல்பட்டு இருக்கிறது. குழுவின் அறிக்கை முற்றிலும் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. தமிழக அரசு தரப்பில் முன்வைத்த வாதங்களில் உள்ள உண்மை நிலவரங்களை இந்த குழுவின் அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை. இந்த குழு எந்த இடத்திலும் நிலத்தடி நீர், தாமிரக்கழிவு தொடர்பாக உருவாகும் சுற்றுச்சூழல் மாசு பற்றி சரிவர ஆய்வு நடத்தவில்லை. அது தொடர்பாக எதுவும் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக தேவையான வாய்ப்புகள் ஆலைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டன. இதனை தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொள்ளாத நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் ஏதோ உடனடியாக இந்த முடிவை எடுத்தது போல சித்தரித்து உள்ளது முற்றிலும் தவறாகும்.

மேலும், ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனம் மனு தாக்கல் செய்து உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க முகாந்திரம் ஏதும் இல்லை. இந்த குழுவின் நியமனம் மற்றும் அதன் அறிக்கை ஆகியவற்றுக்கும் முகாந்திரம் ஏதும் இல்லை.

இவ்வாறு தமிழக அரசின் பதில் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: நிபுணர் குழு அறிக்கையை ஏற்க முடியாது - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதம்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிபுணர் குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் நேற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வாதிடப்பட்டது.
2. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
3. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
4. ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக தருண் அகர்வால் நியமனம்
ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உள்ள குழுவுக்கு தலைவராக தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
5. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து ஆய்வு செய்து முடிவு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.