மம்தா பானர்ஜி அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது - அமித் ஷா சொல்கிறார்


மம்தா பானர்ஜி அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது - அமித் ஷா சொல்கிறார்
x
தினத்தந்தி 7 Dec 2018 9:48 AM GMT (Updated: 7 Dec 2018 9:48 AM GMT)

பா.ஜனதாவின் யாத்திரையின் மீது மம்தா பானர்ஜிக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது, அவருடைய அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது என்று அமித்ஷா குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,
 
பா.ஜனதா ஆட்சியில்லாத மாநிலமான மேற்கு வங்காளத்தில் மொத்தம் 42 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது. அங்கு பா.ஜனதாவிற்கு இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர். 2019-ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் மூன்று நாட்கள் யாத்திரையை மேற்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டது.  2019 தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும் என்று அமித்ஷா திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் பா.ஜனதாவின் யாத்திரைக்கு அரசு தடை விதித்தது. ஐகோர்ட்டு சென்றும் பலனளிக்கவில்லை. 
  
முதல் யாத்திரை கூச்பெகரில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்தது. ஆனால் இந்த யாத்திரைகளுக்கு மாநில அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து மாநில பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

மாநிலத்தில் மதரீதியான மோதல்களும், பதற்றமும் ஏற்படும் என்பதால், இந்த யாத்திரைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு சார்பில் மதரீதியிலான மோதல்கள் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், அப்படியொரு துரதிஷ்டவசமான சம்பவம் நேரிட்டால் யார் பொறுப்பு என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பா.ஜனதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனின்த்யா மித்ரா, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகும் என்றார். இதனையடுத்து அனுமதியளிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

அமித்ஷா சாடல்

இந்நிலையில் மம்தா பானர்ஜி அரசின் நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ள பா.ஜனதா தலைவர் அமித்ஷா,  பா.ஜனதாவின் யாத்திரையின் மீது அவருக்கு பெரும் பயம் ஏற்பட்டுள்ளது, அவருடைய அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

 “அவருடைய அச்சத்தை (மக்கள் ஆதரவு குறைவு) என்னால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் என்னிடம் எந்தஒரு தீர்வும் கிடையாது. பா.ஜனதாவிற்கு ஆதரவு என்பது பொதுமக்களின் முடிவு” என்று கூறியுள்ளார் அமித்ஷா. 

பா.ஜனதாவின் யாத்திரையை தடுப்பது பலனளிக்காது, இது பொதுமக்களை மேலும் கோபம் அடையத்தான் செய்யும் எனவும் மம்தாவிற்கு அமித்ஷா அட்வைஸ் வழங்கியுள்ளார். 


Next Story