தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு


தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 7 Dec 2018 12:33 PM GMT (Updated: 7 Dec 2018 12:33 PM GMT)

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

புதுடெல்லி,

தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று  காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  ராஜஸ்தானில் மாலை 5 மணி நிலவரப்படி 73.83%.  வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இன்றுடன் 5 மாநில தேர்தல்களும் முடிவுக்கு வந்துள்ளது. 

ராஜஸ்தானில் 20 ஆண்டு கால பாஜக ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதும், தெலங்கானா மாநில பிரிப்புக்கு பின் முதன் முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் டிஆர்எஸ் கட்சி, ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வருகிற 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அன்று மதியத்திற்குள் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்பது தெரிந்துவிடும். 

அதே நாளில் நாடாளுமன்ற கூட்டத்தொடரும் துவங்க உள்ளதால் அரசியல் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Next Story