தலித் என்று யோகி கூறியதால் சர்ச்சை; அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு!


தலித் என்று யோகி கூறியதால் சர்ச்சை; அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு!
x
தினத்தந்தி 7 Dec 2018 3:03 PM GMT (Updated: 7 Dec 2018 3:03 PM GMT)

இந்துக்கள் வணங்கும் தெய்வமான அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.


வாரணாசி, 

 
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தின்போது இந்து கடவுள் அனுமன் ஒரு தலித் என்று குறிப்பிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. விவாதப்பொருளாகியது. இதற்கிடையே பா.ஜனதாவிலிருந்து விலகிய பெண் எம்.பி. சாவித்ரி பாய் புலே, உயர் பிரிவினர் அனுமனை கொத்தடிமையாக பயன்படுத்தினர். அவர்கள் தலித்துகள் பிற்படுத்தப்பட்டோரை குரங்குகள், அரக்கன் என்றும் கேலி செய்தனர் என்றார். இந்நிலையில் இவ்விவகாரம் ஆட்சியரிடம் சென்றுள்ளது. அதாவது இந்துக்கள் வணங்கும் தெய்வமான அனுமனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

முலாயம் சிங் யாதவ் தம்பி சிவபால்சிங் தொடங்கிய பிரகதிசீல் சமாஜ்வாடி(லோகியா) என்ற கட்சியின் வாரணாசி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஹரிஷ் மிஸ்ரா வாரணாசி மாவட்ட ஆட்சியரிடம் இந்த மனுவை கொடுத்துள்ளார். அனுமனுக்கு சாதிச் சான்றிதழ் தருமாறு கேட்டு அனுமனின் புகைப்படம் ஒன்றும் ஒட்டப்பட்டு இருந்தது. மனுவில் அனுமனின் தந்தை மகராஜ் கேசரி, தாயார் அஞ்சனா தேவி, பிறப்பிடம் வாரணாசி சங்கத் மோச்சன் கோவில், வயது அழிவற்றது, பிறந்த ஆண்டு எல்லை இல்லாதது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
 
ஒரு வாரத்துக்குள் அனுமன் குறித்த சாதி சான்றிதழை தராவிட்டால் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

யோகி ஆதித்ய நாத் அனுமனை தலித் என்று கூறி கடவுளை சாதி அரசியலுக்குள் இழுத்து விட்டுள்ளார் என குற்றம் சாட்டியுள்ளார் ஹரிஷ் மிஸ்ரா. 


Next Story