நில மோசடி வழக்கு: வதேராவின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை - காங்கிரஸ் கண்டனம்


நில மோசடி வழக்கு: வதேராவின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை - காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 8 Dec 2018 9:44 AM GMT)

நில மோசடி வழக்கு தொடர்பாக, வதேராவின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நில மோசடி வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள ராபர்ட் வதேராவின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு ராஜஸ்தானின் பீகானிர் மாவட்டத்தில் நிலமோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வதேராவுக்கு 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக, டெல்லியின் சுக்தேவ் விகார் பகுதியில் அமைந்துள்ள வதேராவின் அலுவலகத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைப்போல வதேரா நிறுவனத்துடன் தொடர்புடைய 3 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை பெங்களூருவில் நடத்தப்பட்டது.

ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் எத்தகைய வாரண்டும் இல்லாமல் இந்த சோதனையில் ஈடுபட்டதாக வதேராவின் வக்கீல் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அந்த கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘5 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வி உறுதி என்பதை அறிந்து பதற்றத்தில் உள்ள மோடி அரசு, அதை திசை திருப்புவதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பழிவாங்கும் பழைய நடைமுறைகளை கையில் எடுத்துள்ளது. இத்தகைய கோழைத்தனமான மிரட்டல்கள் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியையும், மக்களின் விருப்பத்தையும் கட்டுப்படுத்தாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story