தேசிய செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது + "||" + Post-poll survey results: Congress is in power in Rajasthan

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், ம.பி., சத்தீஷ்காரில் இழுபறியாக உள்ளது என்றும், தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். வெற்றிபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

4 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கலாம். மத்திய பிரதேசம், சத்தீஷ்காரில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இடையே இழுபறி ஏற்படும். தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் டி.ஆர்.எஸ். வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.


அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அமைந்தன.

ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களில் வாக்குப் பதிவு முடிந்த நிலையில், எஞ்சிய தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங் களில் நேற்று ஓட்டுப்பதிவு முடிந்தது.

இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிற ராஜஸ்தானில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என தெரிய வந்துள்ளது. அதே போன்று பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறுகிற மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும், அந்தக் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே இழுபறி ஏற்படலாம்.

தெலுங்கானாவை பொறுத்தமட்டில், சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் 199 இடங்களில் 100 இடங்களை பெற்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். இங்கு இந்தியா டுடே-ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு 119-141 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 55-72 இடங்களும் கிடைக்கலாம் என கூறுகிறது.

டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு காங்கிரசுக்கு 105 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 85 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.

ஆனால் ரிபப்ளிக் டி.வி., ஜன்கி பாத் கருத்துக்கணிப்போ, காங்கிரசுக்கு 81-101 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 83-103 இடங்களும் கிடைக்கலாம் என்கிறது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலத்தில் 230 இடங் களில் 116 இடங்களில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற முடியும்.

இங்கு ரிபப்ளிக் டி.வி., ஜன்கி பாத் கருத்துக்கணிப்பு பாரதீய ஜனதாவுக்கு 108-128 இடங்களும். காங்கிரசுக்கு 95-115 இடங்களும் கிடைக்கலாம் என கூறுகிறது.

இந்தியா டுடே, ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு, பாரதீய ஜனதாவுக்கு 102-120 இடங்களும், காங்கிரசுக்கு 104-122 இடங்களும் கிடைக்கலாம் என்கிறது.

ஆனால் டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு, 126 இடங்களுடன் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும், காங்கிரசுக்கு 89 இடங்கள் கிடைக்கும் என கூறுகிறது.

ஏ.எஸ்.பி. நியூஸ் கருத்துக்கணிப்பு, காங்கிரஸ் கட்சி 126 இடங்களுடன் ஆட்சியைப் பிடிக்கும் என கூறுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பு பாரதீய ஜனதாவுக்கு 94 இடங்கள் கிடைக்கும் என சொல்கிறது.

சத்தீஷ்கார்

90 இடங்களை கொண்ட சத்தீஷ்காரில் 46 இடங்களில் வென்றால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம்.

அங்கு ரிபப்ளிக் டி.வி., சி ஓட்டர் கருத்துக்கணிப்பு பாரதீய ஜனதாவுக்கு 35-43 இடங்களும், காங்கிரசுக்கு 44-50 இடங்களும் கிடைக்கும் என்று கூறுகிறது.

நியூஸ் நேஷன், பாரதீய ஜனதாவுக்கு 38-42 இடங்களும், காங்கிரசுக்கு 40-44 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.

டைம்ஸ் நவ், சி.என்.எக்ஸ். கருத்துக்கணிப்பு, 46 இடங்களுடன் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்கிறது. காங்கிரசுக்கு 35 இடங்கள் கிடைக்கலாம் என கூறுகிறது.

ஏ.பி.பி. நியூஸ், பாரதீய ஜனதாவுக்கு 52 இடங்களும், காங்கிரசுக்கு 35 இடங்களும் கிடைக்கும் என கணித்துள்ளது.

தெலுங்கானா

119 இடங்களை கொண்ட தெலுங்கானாவில் 60 இடங்களைப்பிடித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம்.

அங்கு பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சிக்கு ஆதரவாக அமைந்துள்ளன.

ரிபப்ளிக் டி.வி., டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்புகள் அந்தக் கட்சிக்கு முறையே 50-65, 66 இடங்கள் கிடைக்கலாம் என்கின்றன.

டி.வி. 9 தெலுங்கு, இந்தியா டுடே கருத்துக்கணிப்புகள் அந்தக் கட்சிக்கு முறையே 75-85, 75-91 இடங்கள் கிடைக்கும் என கூறுகின்றன.

சில கருத்துக்கணிப்புகள் டி.ஆர்.எஸ்.சுக்கும், காங்கிரஸ்-தெலுங்குதேசம் கூட்டணி இடையே இழுபறி ஏற்படலாம் எனவும் தெரிவிக்கின்றன.

ஆனால் இறுதி முடிவுகள் எப்படி அமையும் என்று அறிய வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான நிலை.