காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு


காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 5:47 PM GMT (Updated: 8 Dec 2018 5:47 PM GMT)

காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

ஜம்மு,

காஷ்மீரில் பள்ளத்தாக்கு ஒன்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 17 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் லோரன் நகரில் இருந்து பூஞ்ச் பகுதிக்கு இன்று காலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த பஸ் பிலேரா பகுதிக்கு அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய அந்த பஸ், பின்னர் சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பஸ் பலத்த சேதமடைந்தது.

இந்த கோர விபத்தில் சிக்கி 13 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்த 17 பயணிகளை மீட்டு மண்டியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்களில், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில கவர்னர் சத்யபால் மாலிக், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Next Story