வதேரா, கூட்டாளிகள் அலுவலகங்களில் சோதனை: பா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கண்டனம்


வதேரா, கூட்டாளிகள் அலுவலகங்களில் சோதனை: பா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கண்டனம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 7:52 PM GMT)

பா.ஜனதாவின் தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகவே, ராபர்ட் வதேரா மற்றும் அவரது கூட்டாளிகளின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் ராஜஸ்தானில் நில மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வதேராவின் டெல்லி அலுவலகம் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெங்களூரு வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் சோதனை நடத்தியது. மேலும் வதேராவின் நெருங்கிய கூட்டாளியும், காங்கிரஸ் தொண்டருமான ஜெகதீஷ் சர்மாவின் வீட்டிலும் நேற்று சோதனையிட்ட அதிகாரிகள், பின்னர் அவரை கைது செய்தனர்.

இந்த நடவடிக்கைகளால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, மோடி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மற்றும் மூத்த தலைவர் பவன் கெரா ஆகியோர் நேற்று டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிங்வி கூறியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதாவை மக்கள் புறக்கணித்து உள்ளனர் என்ற தகவல் கேட்டு பா.ஜனதாவினர் பதற்றத்தில் உள்ளனர். எனவே பா.ஜனதாவின் தோல்விகள் மற்றும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இந்த சூழ்ச்சி அரங்கேற்றப்படுகிறது. இதைத்தவிர தற்போது நடந்து வரும் சோதனைகளில் வேறு எதுவும் இல்லை.

காங்கிரஸ் கட்சியையும், அதன் மதிப்பீடுகளையும் பார்த்து மோடி அரசு அஞ்சுகிறது. எனவேதான் எங்கள் தலைவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு எதிராக இந்த அடாவடி தந்திரங்களை கையாளுகிறார்கள். அவர்களிடம் உண்மை இல்லாதபோது, இதுபோன்ற செயல்களில்தான் ஈடுபடுவார்கள்.

இந்த சோதனைகள் அனைத்தும் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை வழக்கு தகவல் அறிக்கையோ, சோதனை வாரண்டுகளோ எதையும் வழங்காமல் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டு இருக்கின்றனர்.

அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட ஆட்சி நடந்து வரும் இந்தியாவில், இதுபோன்ற பயங்கரவாத ஆட்சியை ஒருபோதும் பார்த்தது இல்லை. அடக்குமுறை ஆட்சியை நடத்தி வந்த ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போராடி வெற்றி கண்டோம். அதைப்போல, தீர்ப்பு நாள் விரைவில் வரும் என்பதை பா.ஜனதாவினரும் நன்கு அறிவார்கள்.

இதைப்போல சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை நிறுவனங்களும் அமைதியாக, கவனமாக நினைத்து பார்க்க வேண்டும். வாழ்க்கை வட்டமும், காலமும் ஒருநாள் மாறும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறுகையில், ‘சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை நிறுவனங்களின் நேர்மையில் மோடி அரசு சமரசம் செய்து கொள்கிறது’ என குற்றம் சாட்டினார்.



Next Story