தேர்தல் நடந்த ராஜஸ்தானில் சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு எந்திரத்தால் பரபரப்பு - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்


தேர்தல் நடந்த ராஜஸ்தானில் சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு எந்திரத்தால் பரபரப்பு - 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:15 PM GMT (Updated: 8 Dec 2018 8:06 PM GMT)

சட்டசபை தேர்தல் நடந்த ராஜஸ்தானில், சாலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கேட்பாரற்று கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கிஷான்கஞ்ச்,

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு 199 தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 52 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்காக சுமார் 2 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தேர்தலில் 72.9 சதவீத வாக்குகள் பதிவாயின.

வருகிற 11-ந்தேதி நடைபெற இருக்கும் ஓட்டு எண்ணிக்கையில் மாநிலத்தில் ஆட்சியை பா.ஜனதா தக்க வைத்துக்கொள்ளுமா? அல்லது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? என்பது தெரிந்து விடும்.

இந்த நிலையில் ராஜஸ் தானின் பாரன் மாவட்டத்தில் உள்ள கிஷான் கஞ்ச் சட்டசபை தொகுதிக்குள் அடங்கிய சஹாபாத் பகுதியில் முகவாலி என்னும் கிராமம் அருகே மாநில நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு வாக்குப் பதிவு எந்திரம் கேட்பாரற்று கிடந்தது. அது மூடி முத்திரையிடப்பட்டு இருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அந்த வாக்குப் பதிவு எந்திரத்தை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்த மின்னணு எந்திரம் தேர்தலுக்கு பயன் படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.

ஓட்டு எண்ணிக்கைக்காக வாக்குப் பதிவு எந்திரங்களை வாகனத்தில் கொண்டு சென்றபோது அது தவறி விழுந்திருக்கலாம் எனவும், இதை தேர்தல் அதிகாரிகள் கவனிக் காமல் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனினும், இதில் மிகவும் கவனக்குறைவாக இருந்த காரணத்துக்காக தேர்தல் அதிகாரிகள் அப்துல் ரபீக், நாவல் சிங் பட்வாரி ஆகியோரை தேர்தல் கமிஷன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.



Next Story