ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் ‘மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ - ஆர்.எஸ்.எஸ். தலைவர் வலியுறுத்தல்


ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் ‘மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ - ஆர்.எஸ்.எஸ். தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2018 11:15 PM GMT (Updated: 9 Dec 2018 8:02 PM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அங்கு ராமர் கோவில் நிச்சயம் கட்டுவோம் என கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா வாக்குறுதி அளித்து இருந்தது.

ஆனால் ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் கடந்த பிறகும், கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய அரசு தள்ளிப்போட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமர் கோவில் விவகாரத்தை பல்வேறு கட்சிகளும், இந்து அமைப்புகளும் தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.

அந்தவகையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. ராமர் கோவில் கட்டுவதை வலியுறுத்தி ‘தர்ம சன்சாத்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் இந்து சாமியார்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘இன்று ஆட்சியில் இருப்பவர்கள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர். ஆனால் அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.

நாடு ராம ராஜ்ஜியத்தை விரும்புவதாக கூறிய ஜோஷி, இதற்காக நாங்கள் பிச்சை கேட்கவில்லை எனவும், உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

டெல்லியை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. மகேஷ் கிரி பேசும்போது, ‘இந்த பிரமாண்ட கூட்டம், மக்களின் வேதனையை எதிரொலிக்கிறது. கோர்ட்டு மீது இந்துக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் அயோத்தி விவகாரம் முக்கியமான பிரச்சினை அல்ல என நீதித்துறை கூறியிருக்கிறது. இதே நீதித்துறைதான் ஒரு பயங்கரவாதிக்காக நள்ளிரவை தாண்டியும் செயல்பட்டது. எனவேதான் டெல்லி தெருக்களில் எல்லாம் இந்துக்களின் வேதனை எதிரொலிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

விஸ்வ இந்து பரிஷத் இணை செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறும்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்டம் இயற்றுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த கூட்டம் அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்க இருக்கும் நிலையில், இந்த கூட்டம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நேற்று காலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையொட்டி தலைநகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.



Next Story