தி.மு.க. தலைவரான பின் டெல்லிக்கு முதல் பயணம்: சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்


தி.மு.க. தலைவரான பின் டெல்லிக்கு முதல் பயணம்: சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 10 Dec 2018 12:15 AM GMT (Updated: 9 Dec 2018 8:40 PM GMT)

டெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பா.ஜனதா வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று (திங்கட்கிழமை) பங்கேற்கும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதியின் முழு உருவச் சிலை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிற கோலாகல விழாவில் கருணாநிதி சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை டெல்லி சென்றார்.

அவர், தி.மு.க. தலைவர் ஆன பின்னர் டெல்லிக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை.

அவர் சோனியாகாந்தியை அக்பர் ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் காலை சுமார் 11.20 மணிக்கு சந்தித்தார். சோனியா காந்திக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அஜயன் பாலா எழுதிய ‘செம்மொழிச்சிற்பிகள்’ என்ற புத்தகத்தையும் அவர் சோனியாவுக்கு பரிசாக வழங்கினார்.

உடன் இருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்தார்.

அதைத் தொடர்ந்து கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழை அவர் சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் வழங்கி, அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, தி.மு.க. முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.

சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் மு.க. ஸ்டாலின் எடுத்து கூறினார்.

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவர்கள் பேசிக்கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பு, காலை 11.55 மணிக்கு முடிந்தது. அதைத் தொடர்ந்து, டெல்லி மின்டோ ரோடு பகுதியில் தி.மு.க. அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதையடுத்து அவர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள கனிமொழி எம்.பி. வீட்டுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு, அவர் ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக ஒரே அணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) கூடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஏற்பாட்டில் நடக்கிற இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்து பேசியது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ராகுல்காந்தியின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. ஒரே நோக்கம் கொண்ட கொள்கைகள் எப்பொழுதும் அர்த்தமுள்ள விவாதங்களையும், அதன் மூலம் நல்ல பலன்களுக்குமே வழிவகுக்கும். காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில், மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Next Story