“எங்களிடம் மோடி உள்ளார், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?” எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கேள்வி


“எங்களிடம் மோடி உள்ளார், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?” எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கேள்வி
x
தினத்தந்தி 10 Dec 2018 9:40 AM GMT (Updated: 10 Dec 2018 9:40 AM GMT)

“எங்களிடம் மோடி உள்ளார், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?” என்று எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜனதா கேள்வியை எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராகி வருகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பது தொடர்பாக  உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் அக்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவிற்கு எதிராக மகா கூட்டணியை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பா.ஜனதாவை வெளியேற்றுவதற்கு முன்னதாக பிரதமர் வேட்பாளரை அறிவியுங்கள் என்று எதிர்க்கட்சிகளை பா.ஜனதா கேலி செய்துள்ளது.

பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் கையிலாஷ் விஜய்வார்கியா பேசுகையில், “எங்களுக்கு எதிராக போட்டியிட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய முயற்சி செய்வதை பார்ப்பது நல்லது. முதலில் அவர்கள் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யாரென்பதை அறிவிக்கட்டும். பின்னர் எங்களை ஆட்சியிலிருந்து அகற்றுவது தொடர்பாக கனவு காணட்டும்,” என்று கூறியுள்ளார்.  “எங்களிடம் பிரதமர் மோடி உள்ளார், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்?” என்று எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லி சென்றுள்ளார். இதனை விமர்சனம் செய்துள்ள பா.ஜனதா தலைவர் முகுல் ராய், கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிகளை திரிணாமுல் காங்கிரஸ் முதன்மை எதிரியாக பார்த்துவந்தது, அவர்கள் இப்போது நண்பர்களாகிறார்களா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். 

Next Story