பீகார் கூட்டணி கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி குஷ்வாகா ‘திடீர்’ ராஜினாமா - பா.ஜனதா அணியில் இருந்தும் விலகினார்


பீகார் கூட்டணி கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி குஷ்வாகா ‘திடீர்’ ராஜினாமா - பா.ஜனதா அணியில் இருந்தும் விலகினார்
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 8:09 PM GMT)

பீகார் மாநில கூட்டணி கட்சியை சேர்ந்த மத்திய மந்திரி உபேந்திர குஷ்வாகா ராஜினாமா செய்தார். பா.ஜனதா கூட்டணியில் இருந்தும் விலகினார்.

புதுடெல்லி,

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரீய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா கூட்டணி சார்பில் இக்கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

உபேந்திர குஷ்வாகா, மத்திய மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். சமீபகாலமாக, பா.ஜனதாவுடனும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருடனும் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2 தொகுதிகளுக்கு மேல் அவரது கட்சிக்கு ஒதுக்க முடியாது என்று பா.ஜனதா கூறியதால் அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார். அதில், “உங்களின் தலைமையில் எனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது. ஏழைகளுக்கு பாடுபடுவதை விட்டுவிட்டு, அரசியல் எதிரிகளை குறிவைப்பதே மத்திய அரசின் முன்னுரிமை பணியாக உள்ளது” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் தனது கட்சி விலகுவதாக உபேந்திர குஷ்வாகா அறிவித்தார்.

இதுகுறித்து குஷ்வாகா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அவருடன் கைகோர்த்தோம். ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டத்தை நிறைவேற்றி வருகிறார். மத்திய மந்திரிசபை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக நடத்தப்படுகிறது. எல்லா முடிவுகளையும் மோடியும், அமித் ஷாவுமே எடுக்கின்றனர். மேலும், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காமல் மோடி ஏமாற்றி விட்டார்.

பீகாரில் எங்கள் கட்சியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதாவும், நிதிஷ் குமாரும் ஈடுபட்டனர். இந்த காரணங்களால், மந்திரிசபையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறேன்.

தனித்து செயல்படுவது, காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது, 3-வது அணி உருவாக்குவது என எல்லா வாய்ப்புகளையும் பரிசீலிப்போம். விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம்.

பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. இவ்வாறு உபேந்திர குஷ்வாகா கூறினார்.

குஷ்வாகாவின் முடிவை ராஷ்டிரீய ஜனதாதளம் வரவேற்றுள்ளது.


Next Story