ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு


ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அடுத்த வாரம் தீர்ப்பு
x
தினத்தந்தி 10 Dec 2018 10:30 PM GMT (Updated: 10 Dec 2018 8:16 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அடுத்த வாரம் தீர்ப்பு வழங்குகிறது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து, அந்த ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் இல்லை என்றும், குழுவினரால் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுடன் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 7-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது என்று தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் தலைமையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடுகையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. தாமிர கழிவுகளால் அப்பகுதியில் உள்ள உப்பாறு நீரோட்டம் பாதிப்படைந்து இருக்கிறது. உப்பாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டி உள்ளனர்.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் தரம் குறைந்து மோசமானது குறித்து ஸ்டெர்லைட் ஆலை கவலைப்படவில்லை. நிலத்தடி நீர் மாசு, சுற்றுப்புற சுகாதார சீர்கேடு காரணமாகவே தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டது. பலமுறை ஆலை விதிகளை மீறி செயல்பட்டு உள்ளது, விதிகளை மீறியதால் சுப்ரீம் கோர்ட்டு அபராதம் கூட விதித்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான வக்கீல் அரிமா சுந்தரம் வாதாடுகையில் கூறியதாவது:-

மீமிசல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலத்தடி நீரில், தூத்துக்குடியை விட உப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தூத்துக்குடி கடலின் அருகில் இருப்பதால் நீரில் உப்புத்தன்மை ஏற்பட்டதே தவிர, ஆலையால் அல்ல. ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் நீர் மாசடைவதற்கு ஆலை காரணம் அல்ல.

ஆலை அமைந்துள்ள பகுதியை விட பிற பகுதிகளில் தான் நிலத்தடிநீரில் மாசு அதிக அளவில் உள்ளது. அதற்கான அறிக்கை உள்ளது. அதை தமிழக அரசு மறைத்து விட்டது. எனவே ஸ்டெர்லைட் ஆலை தான் நீர், சுற்றுப்புற மாசுக்கு காரணம் என குற்றம்சாட்டுவது தவறானது. இவ்வாறு அரிமா சுந்தரம் கூறினார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் பசுமை தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதாடுகையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மறியல், உண்ணாவிரதம், நடைபயணம் என பல போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். எந்த போராட்டத்திலும் துளி அளவு வன்முறையும் ஏற்பட்டது இல்லை.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர அடர்த்தியில் இருந்து தாமிரத்தைத் தயாரிக்கும் உலையின் புகை போக்கி உயரம் 60 மீட்டர்தான் இருக்கிறது. ஒரு நாளைக்கு 391 டன் உற்பத்தி ஆகும் போது அந்த உயரம் சரிதான். ஆனால், இப்பொழுது ஒரு நாளைக்கு 1,200 டன் தாமிரம் உற்பத்தி செய்கிறார்கள். 1986-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி புகைபோக்கியின் உயரம் 99.6 மீட்டர் இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கே வருமானம் போய் விட்டது. தாமிரம் இறக்குமதி செய்கிறோம் என்று ஸ்டெர்லைட் வக்கீல் மிகவும் ஆதங்கப்பட்டார். தாஜ்மகால் மாசுபடாமல் பாதுகாக்க, யமுனை நதி கரையில் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த பல தொழிற்சாலைகளை சுப்ரீம் கோர்ட்டு மூடி விட்டதே?

ஸ்டெர்லைட் ஆலையை 99.9 சதவீத மக்கள் எதிர்க்கின்றார்கள். தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இவ்வளவு காலமும் செயல்பட்டார்கள்.

உண்மைகளை மறைப்பதும், தவறான தகவல்கள் தருவதும் ஸ்டெர்லைட்டின் வழக்கம் என்று, சுப்ரீம்கோர்ட்டே தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது ஒன்று தான், தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்று வட்டார மக்களை பாதுகாக்கும். இவ்வாறு வைகோ கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

Next Story