பாரதீய ஜனதாவை எதிர்ப்பதில் கருத்து ஒற்றுமை - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பின் ராகுல் காந்தி பேட்டி


பாரதீய ஜனதாவை எதிர்ப்பதில் கருத்து ஒற்றுமை - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பின் ராகுல் காந்தி பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 8:29 PM GMT)

பாரதீய ஜனதாவை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. சமீபத்தில் பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு இதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.

நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லியில் நேற்று மாலை எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்து இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், அகமது பட்டேல் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி. (திமு.க.) உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்குவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர்கள் விவாதித்தனர்.

கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவை தோற்கடிக்க ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கியை பாதுகாக்கும் நோக்கத்தில் அதன் தலைவர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்து இருக்கிறார். ரிசர்வ் வங்கியின் பணத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ள முயற்சிப்பது நாட்டின் நலனுக்கு எதிரானது. ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சகித்துக்கொள்ள முடியாது. இந்த தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட்டு கருத்து ஒற்றுமையுடன் செயல்படுவது பெருமை அளிப்பதாக உள்ளது. இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். அப்போது சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.

மம்தா பானர்ஜி கூறுகையில், சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் சீரழிந்து விட்டதாகவும், ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்து இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். பாரதீய ஜனதா சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும், பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

21 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

Next Story