சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி: 16-ந்தேதி, பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு


சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி: 16-ந்தேதி, பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 10 Dec 2018 11:15 PM GMT (Updated: 10 Dec 2018 8:39 PM GMT)

சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி 16-ந்தேதி தொடங்குகிறார். இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் அனைத்தும் தொடங்கி விட்டன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதில் மும்முரமாக உள்ளது.

எனினும் சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சி அதிகமாக இருக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் அவ்வளவு சுலபத்தில் வெற்றி பெற முடியாது என்பதை அந்த கட்சி உணர்ந்து இருக்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்திகளை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி உத்தரபிரதேசத்துக்கு செல்கிறார். அங்கு ரேபரேலி மாவட்டத்தின் லால்கஞ்ச் நகரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ள 900 ரெயில் பெட்டிகளை தொடங்கி வைக்கும் அவர், பின்னர் ரேபரேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த கூட்டத்தை பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாகவே பா.ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் கருதுகின்றனர். எனவே இதை பிரமாண்டமாக நடத்தவும், 3 லட்சம் மக்களை திரட்டவும் மாநில பா.ஜனதா முடிவு செய்து பணியாற்றி வருகிறது. ரேபரேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரயக்ராஜ் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு அடுத்த மாதம் நடைபெறும் கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். இதைத்தவிர வருகிற 29-ந்தேதி மீண்டும் உத்தரபிரதேசத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, தனது சொந்த தொகுதியான வாரணாசி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் மிக முக்கிய களமாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் பிரதான கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்றவை பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு வருகின்றன. எனவே அங்கு ஆளுங்கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை பா.ஜனதாவினர் உணர்ந்துள்ளனர்.

இதை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதுடன், மேலும் பலமுறை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக பா.ஜனதாவினர் கூறியுள்ளனர்.

Next Story