5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி: பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவு


5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலி: பங்குச்சந்தை பெரிய அளவில் சரிவு
x
தினத்தந்தி 11 Dec 2018 5:18 AM GMT (Updated: 11 Dec 2018 5:18 AM GMT)

5 மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியாக பங்குச்சந்தையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டு உள்ளது.

மும்பை: 

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ள நிலையில் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநில தேர்தல்களுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் நேற்று மாலை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பொருளாதார நிபுணரும், எழுத்தாளருமான சுர்ஜித் பல்லா பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து இன்று விலகியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலையே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய தொடங்கியது. 1 டாலருக்கு நிகராக 71.35 ரூபாயாக இருந்த மதிப்பு 72.34 ரூபாயாக தற்போது சரிந்து இருக்கிறது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் 3 மாநிலங்களில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் மற்றும் உர்ஜித் பட்டேல் ராஜினாமா காரணமாக ரூபாயின் மதிப்பு இன்று மேலும் சரிந்தது. தற்போது 1 டாலருக்கு நிகராக 71.56 ரூபாயாக உள்ளது.

அதேபோல் மும்பை பங்கு சந்தை மிகப்பெரிய சரிவுடன் தொடங்கி உள்ளது. தெலுங்கானா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதனால் மும்பை பங்கு சந்தை 200 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் மிகவும் நெருக்கமாக, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் வந்தாலோ, இல்லை பாஜக தோல்வி அடைந்தாலோ பங்கு சந்தை இன்னும் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் தற்போது பங்குச்சந்தை நிபுணர்கள் மிகுந்த கவனத்துடன் அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறார்கள்.

Next Story