குளிர்கால கூட்டத்தொடரில் மக்கள் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; பிரதமர் மோடி


குளிர்கால கூட்டத்தொடரில் மக்கள் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 Dec 2018 5:56 AM GMT (Updated: 11 Dec 2018 5:56 AM GMT)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொதுமக்கள் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முழுமையான கடைசி தொடர் இது என்பதால் அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

அடுத்த மாதம் (ஜனவரி) 8-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ள இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இதில், முத்தலாக் அவசர சட்டம், இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய மசோதாக்களை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் ரபேல் ஒப்பந்த ஊழல், அயோத்தி விவகாரம், சி.பி.ஐ. போன்ற விசாரணை நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள், ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இடையேயான மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் புயலை கிளப்பும் என தெரிகிறது.

இந்த தொடரை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை கோரும் வகையில் மத்திய அரசு நேற்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசும்பொழுது, இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது.  இதில், பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு விவகாரங்கள் எடுத்து கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் இதற்கு மதிப்பளித்து அவை நடவடிக்கைகளில் செயல்படுவர் என நம்பிக்கையுடன் இருக்கிறேன்.  அனைத்து விவகாரங்களிலும் விவாதங்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

Next Story