ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; சச்சின் பைலட் 8 சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை


ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; சச்சின் பைலட் 8 சுயேச்சைகளுடன் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 11 Dec 2018 7:54 AM GMT (Updated: 11 Dec 2018 7:54 AM GMT)

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க 8 சுயேச்சைகளுடன் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி ஓட்டு பதிவு நடந்து முடிந்தது. இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆல்வாரின் ராம்கார் தொகுதியில் லட்சுமண சிங் என்ற வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில் அந்த ஒரு தொகுதிக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  ஓட்டு எண்ணும் 40 மையங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும், பா.ஜ.க. 79 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. இதேபோன்று பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சி.பி.எம். 2 இடங்களிலும் மற்றும் பிற கட்சிகள் 16 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.  அங்கு இந்த இரு கட்சிகளிடையே முன்னிலையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில், ஆட்சியை பிடிப்பதற்காக 8 சுயேச்சைகளுடன் காங்கிரசின் சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Next Story