மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டியை நோக்கி முன்னிலைப் பெற்றது காங்கிரஸ்


மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டியை நோக்கி முன்னிலைப் பெற்றது காங்கிரஸ்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:02 AM GMT (Updated: 11 Dec 2018 11:02 AM GMT)

மத்திய பிரதேசத்தில் மெஜாரிட்டியை நோக்கி காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பா.ஜனதாவின் கோட்டையாக மத்திய பிரதேசம் இருந்து வருகிறது. 2014 பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜனதா சார்பில் சிவராஜ் சிங் சவுகானை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.  அவர் 2003-ல் இருந்து முதல்வராக இருந்து வருகிறார். விவசாயிகள் பிரச்சனையில் பெரும்  சவாலை எதிர்க்கொண்ட நிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மாநிலத்தில் பெரும் போட்டி நிலவும் என தெரிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ச்சியாக எண்ணப்பட்டு வருகிறது. காலையிலிருந்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவிற்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. முதலில் காங்கிரஸ் அதிகத் தொகுதியில் முன்னிலை பெற்றது. பின்னர் பா.ஜனதா முன்னிலை பெற்றது. பா.ஜனதா 111 தொகுதியிலும், காங்கிரஸ் 109 தொகுதியிலும் முன்னிலை பெற்றது. பா.ஜனதா கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முற்படும் என்று கருத்துக்கள் நிலவியது. இந்நிலையில் மீண்டும் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. அதுவும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும் வகையில் ஆட்சியை அமைப்பதற்கான மெஜாரிட்டியை நோக்கி முன்னிலைப் பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 ஆகும். இப்போது காங்கிரஸ் 116 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜனதா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 104 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிகளில் மட்டும் முன்னிலைப் பெற்றுள்ளது. பா.ஜனதா கோட்டையான மத்திய பிரதேசத்தில் தோல்வியென்றால் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும். 

Next Story