2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் - ராகுல்காந்தி


2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 11 Dec 2018 2:58 PM GMT (Updated: 11 Dec 2018 2:58 PM GMT)

2019 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சத்தீஷ்கர், ராஜஸ்தானில ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் முன்னிலைப் பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரையில் நெருக்கடியான முன்னிலை நிலவரம் நிலவுகிறது. காங்கிரஸ் 112 பா.ஜனதா 110 என்ற நிலையில்தான் செல்கிறது. பா.ஜனதாவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் டெல்லியில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

ராகுல் காந்தி பேசுகையில், மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.  இது விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வெற்றியாகும்.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் நாங்கள் பா.ஜனதாவை தோற்கடித்துள்ளோம்.  இது மாற்றத்திற்கான நேரமாகும். வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை இம்மாநிலங்களுக்கு வழங்கப்போகிறோம். பிரதமர் மோடி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என்பதை தேர்தல் முடிவு உறுதிசெய்துள்ளது. எதிர்க்கட்சிகள் வலுவாக இணையும், 2019 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். 

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்  கட்சிகள் கொள்கை அளவில் காங்கிரசுடன் ஒத்தவை. மூன்று மாநிலங்களிலும் முதல்வரை தேர்வு செய்வது மிகவும் சுமூகமாக நடைபெறும். பிரதமர் மோடியும் ஊழல் செய்துள்ளார் என்பதை மக்களும் தெரிந்து கொண்டுள்ளனர். எங்களுடைய ஆட்சி அமர்ந்ததும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதற்கான பணி தொடங்கும் என கூறியுள்ளார். 

 “பா.ஜனதா தனக்கென கொள்கையை கொண்டுள்ளது. நாங்கள் அதற்கு எதிராக போராடுவோம், தோற்கடிப்போம். நாங்கள் இன்று அவர்களை தோற்கடித்துள்ளோம். 2019லும் இது நடக்கும். ஆனால் நாங்கள் யாரையும் இந்தியாவைவிட்டு வெளியேற்ற மாட்டோம்,” என கூறியுள்ளார். இந்தியாவைவிட்டு காங்கிரஸை வெளியேற்றுவோம் என பா.ஜனதா கூறுவதை குறிப்பிட்டு ராகுல் காந்தி இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். 


Next Story